பத்தனம்திட்டா: புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜையில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் கேரளா செல்கின்றனர். ஒரு மண்டலம் விரதம் இருந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சபரிமலை செல்லும் பக்தர்கள், ஐயப்பனை தரிசித்து மண்டல பூஜையில் கலந்து கொள்கின்றனர்.
நடப்பாண்டுக்கான சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை கடந்த நவம்பர் 17ஆம் தேதி திறக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் விரதம் இருந்து மண்டல பூஜையில் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசித்தனர். இன்றுடன் (டிசம்பர் 27-ஆம் தேதி) 41 நாள் மண்டல பூஜை நிறைவு பெற்றநிலையில், ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
கரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இருந்த தடை முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், பக்தர்களின் வருகை கட்டுக்கடங்காத அளவில் இருந்ததாக சபரிமலை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
கடந்த 39 நாட்களில் மட்டும் கோயிலுக்கு 222 கோடியே 98 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உண்டியல் மூலமாக மட்டும் 70 கோடியே 10 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏறத்தாழ 29 லட்சம் பக்தர்கள் நடப்பாண்டில் தரிசனம் செய்ததாகவும் அதில் 20 சதவீதம் பேர் சிறுவர், சிறுமியர் என்றும்; திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகள் கூறினர். சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கு என பிரத்யேகமாக தனி வரிசை அமைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படிபூஜையுடன் கோயில் நடை அடைக்கப்பட்ட நிலையில், வரும் 30ஆம் தேதி மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு மீண்டும் கோயில் நடை திறக்கப்படும் என போர்டு அதிகாரிகள் கூறினர்.
இதையும் படிங்க: வெகு விமரிசையாக நடைபெற்ற சபரிமலை மண்டல பூஜை