டெல்லி: நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதா, யுனானி உள்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் தேர்வு) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
நீட் தேர்வு ஆண்டுதோறும் மே மாதம் தேசியத் தேர்வு முகமை (NTA- NATIONAL TESTING AGENCY) சார்பில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், கரோனா பரவலால் கடந்த ஆண்டு நீட் தேர்வு பலமுறை ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து, செப்டம்பர் 13ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது.
இதற்கிடையே இந்த ஆண்டு, கரோனா 2ஆம் அலை பரவலால் சிபிஎஸ்இ 12ஆம் பொதுத்தேர்வுகளை ஒன்றிய அரசு ரத்து செய்துவிட்ட நிலையில், இதை தொடர்ந்து பல மாநில அரசுகள் 10ஆம், 12ஆம் பொதுத்தேர்வுகளை ரத்து செய்துள்ளது. ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது. சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ரத்து குறித்து அறிவித்த போது, நீட் தேர்வு பற்றி அறிவிப்பு ஏதும் அரசு வெளியிடவில்லை.
தேதி அறிவிப்பு தொடர்பான வதந்தி
இதனால், நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா என கேள்வியெழுந்து வந்த நிலையில், வரும் செப்டம்பர் மாதம் நீட் தேர்வு நடத்தவிருப்பதாக ஒரு அறிவிப்பு சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
இது குறித்து, விளக்கம் அளித்துள்ள என்டிஏ, "நீட் தேர்வு செப்டம்பர் 5ஆம் தேதி நடத்தப்படும் என்ற ஒரு பொய்யான பொது அறிவிப்பு சமூக ஊடகங்களில் வலம் வருகிறது. இது உண்மை இல்லை, செப்டம்பர் 5ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்படுவதாக தேசிய தேர்வு ஆணையம் பொது அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு எப்போது ?
தேர்வு, பாடத்திட்டம், வயது வரம்பு, இட ஒதுக்கீடு, தேர்வுக் கட்டணம், தேர்வு மையங்கள் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் https://ntaneet.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.