டெல்லி: ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தலைவர் மோகன் பகவத் மத்திய டெல்லி பகுதியில் அமைந்துள்ள கஸ்தூரிபாய் காந்தி மார்கில் உள்ள ஒரு மசூதிக்குச்சென்றார். அதைத்தொடர்ந்து டெல்லியின் வடக்குப்பகுதியில் உள்ள ஆசாத்பூரில் உள்ள மதரஸா கல்வி நிலையத்திற்குச்சென்றார்.
அங்கிருந்த அகில இந்திய இமாம் அமைப்பின் அலுவலகத்திற்குச்சென்ற பின்னர், இஸ்லாமிய மதகுரு இலியாஸின் இல்லத்திற்குச்சென்று அவருடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கலந்துரையாடினர்.
இதுகுறித்துப் பதிலளித்த இலியாஸ், ''பகவத் ஒரு ‘ராஷ்டிர பிதா’. நாட்டை வலுப்படுத்துவதற்கான பல விஷயங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம்" என்று கூறினார். மேலும் மதரஸாவில் உள்ள குழந்தைகளிடம் தேசத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பகவத் பேசினார். இதனையடுத்து வழிபாட்டு முறைகள் வேறுபட்டாலும், அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
பகவத்தின் திடீர் விசிட் குறித்து ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர் பிரமுக் சுனில் அம்பேகர் வெளியிட்ட அறிக்கையில், "சர்சங்கசாலக் அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்கிறார். இது 'சம்வத்' செயல்முறையின் ஒரு பகுதியாகும்" என்று கூறினார்.
முன்னதாக இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, பகவத் சமீபத்தில் டெல்லியின் முன்னாள் லெப்டினன்ட் கவர்னர் நஜீப் ஜங், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரைஷி, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜமீர் உதின் ஷா, முன்னாள் எம்.பி. ஷாகித் சித்திக் மற்றும் தொழிலதிபர் சயீத் ஆகியோரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஹிஜாப் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு - உச்ச நீதிமன்றம் உத்தரவு!