திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஆந்திர எல்லைப் பகுதி வழியாக தமிழகத்திற்கு செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக திருத்தணி துணை காவல் கண்காணிப்பர் ரவிச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அதிகாலை காவலர்கள் ரோந்து பணியில் ஈடுப்பட்டு வந்தனர்.
அப்போது, திருத்தணியிலிருந்து சித்தூர் மாநில நெடுஞ்சாலைப் பகுதியில் வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. நிற்காமல் வேகமாக சென்ற வேனை நீலகண்டன், அருள், தியாகு ஆகிய காவலர்கள் விரட்டிச் சென்று கே.ஜி. கண்டிகை பகுதியில் மடக்கினர். அப்போது, வேனிலிருந்து ஓட்டுநர் தப்பி ஓட்டம் பிடித்தார்.
உடனே, காவல் துறையினர் வேனில் சோதனையிட்டபோது ரூ. 2 கோடி மதிப்பிலான சுமார் மூன்று டன் எடை கொண்ட 40 செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது. காவல் துறையினர் இவை அனைத்தையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பின்னர், செம்மரக்கட்டைகள் வேன் மடக்கிப் பிடிப்பதில் துணிச்சலாக செயல்பட்ட காவலர்களை துணை காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.
இதையும் படிங்க : கஞ்சா போதையில் அதிகரிக்கும் குற்றங்கள்: திணறும் காவல் துறை!