டெல்லி: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய இணை நிதியமைச்சர் பங்கஜ் சௌத்ரி பதிலளித்துள்ளார்.
அதில்,"பொதுமக்களின் பரிவர்த்தனை தேவையை எளிதாக்குவதற்கும், சரியான கலவையில் ரூபாய் தாள்களை பராமரிக்கவும் ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து குறிப்பிட்ட மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது குறித்து அரசு முடிவெடுத்துள்ளது.
அச்சடிப்பு நிறுத்தம்
2018 மார்ச் 31ஆம் தேதி அன்று இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் 336.3 கோடி தாள்கள் புழக்கத்தில் இருந்தது. இது புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளில் 3.27 விழுக்காடு ஆகும்.
தற்போது, 2021 நவம்பர் 26ஆம் அன்று 223.3 கோடி தாள்கள் புழக்கத்தில் உள்ளது. இது புழக்கத்தில் 1.75 விழுக்காடு எண்ணிகையிலும், 15.11 விழுக்காடு மதிப்பிலும் குறைந்துள்ளது.
2018-19ஆம் ஆண்டிலிருந்து 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க புதிய உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாததால், 2,000 ரூபாய் தாள்களின் புழக்கம் குறைந்துள்ளது. தாள்கள் அழுக்கானதாலும், சேதமடைந்ததாலும் புழக்கம் குறைந்துள்ளது" என்றார். பணமதிப்பிழப்பிற்கு பின்னர், 2000, 500, 200 மதிப்பில் புதிய தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரூ.20,353 கோடி மதிப்பிலான மோசடி சொத்துகள் கண்டுபிடிப்பு - அரசு தகவல்