ராஞ்சி : ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ரயில்வே பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாட்னாவில் இருந்து ஜார்கண்ட் டல்டன்கஞ்ச் நோக்கி சென்று கொண்டு இருந்த ஹதியா விரைவு ரயிலில் பெண் ஒருவர் தனது இரு மகள்களுடன் கடந்த ஜூலை 26ஆம் தேதி பயணித்து உள்ளார். நள்ளிரவு நேரம் பயணிகள் அனைவரும் தூங்கிக் கொண்டு இருந்த நிலையில், தனது இரு மகள்களை படுக்கையில் தூங்கச் செய்து விட்டு அந்த பெண்ணும் தூங்கிக் கொண்டு இருந்து உள்ளார்.
ஓடும் ரயில் சிறுமி திடீரென கண் விழித்து பார்த்த போது காவலர் ஒருவர், பாலியல் ரீதியாக சிறுமியை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ந்து போன சிறுமி கத்தி கூச்சலிட்டு உள்ளார். சிறுமியின் தாய் மற்றும் சக பயணிகள் விழித்துக் கொண்ட நிலையில், அனைவரும் காவலரை பிடித்து வாக்குவாதம் மற்றும் அடிக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
இதனிடையே அடுத்தடுத்த பெட்டிகளில் இருந்த காவலர்கள் உடனடியாக வந்து பயணிகளிடம் சிக்கிக் கொண்ட காவலர்களை மீட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் சிறுமி மற்றும் அவரது தாயார் பதறிப் போன நிலையில், மறுநாள் காலை ராஞ்சி ரயில் நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் பெண் புகார் அளித்து உள்ளார்.
இந்த புகார் தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை காவலர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த போலீசார், வழக்கை சம்பவம் நடைபெற்ற கொதர்மா ரயில் நிலைய காவல் நிலையத்திற்கு மாற்றினர். ரயிலில் பயணிக்கும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் காவலரே நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட காவலர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே போலீசார் தெரிவித்து உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் கர்நாடகவில் இருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வரை செல்லும் விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிஆர்பிஎப் வீரர் கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. கணவருடன் பயணித்த பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவலர் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க : இம்பால் விரைந்த INDIA கூட்டணியின் பிரதிநிதிகள் குழு.. கலவரம் பாதித்த இடங்களில் ஆய்வு!