சாமராஜநகர் (கர்நாடகா): அமைச்சர் வி.சோமண்ணாவின் ஆதரவாளர்கள் 12 லட்ச ரூபாய் செலவில் ரோபோடிக் மற்றும் அறிவியல் ஆய்வகத்தை குண்ட்லுப்பேட்டை தாலுகாவில் உள்ள பேகூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். இன்று அமைச்சர் சோமண்ணா இந்த ஆய்வகத்தை திறந்து வைத்தார்.
ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள இந்த பித்யூத் (Bidyut) ரோபோ ஆய்வகத்தில் ஆசிரியருக்குப் பதிலாக எந்த தகவலை கேட்டாலும் வழங்கும் வல்லமை கொண்டது அதுவும் எந்த மொழியில் வேண்டுமானாலும் வழங்கும். இந்த ஆய்வகத்திற்கு சித்தகங்கா சிவகுமார சுவாமியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பேகூரில் உள்ள இந்த அரசுப்பள்ளியானது பிரத்யேகமாக ரோபோட்டிக்ஸ் ஆய்வகத்தைப் பெற்ற முதல் அரசுப் பள்ளியாகும்.
ரோபோட்டிக்ஸ் ஆய்வகத்தில், ஆசிரியரின் வேலையை இந்த ரோபோ செய்யும். ரோபோவுடன் 2,000 மாடல் மேக்கிங் கிட்களும் உள்ளன. தெரு விளக்கு தயாரிப்பது எப்படி? காற்றாலை மின்சாரம், சோலார் பேனல், மொபைல் ஆபரேஷன், மைக்ரோஸ்கோப் தயாரிப்பது எப்படி? என மாணவர்கள் எந்த மாதிரியை உருவாக்க விரும்புகிறாரோ, அதற்கு ரோபோ அவர்களுக்கு வழிகாட்டும். மாணவர்கள் நடைமுறையில் அனைத்தையும் ரோபோவின் வழிகாட்டுதலுடன் கற்றுக்கொள்வார்கள்.
ஜப்பானில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த ரோபோ, ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்கும். ஒரு பள்ளியில் கணித ஆசிரியர் இல்லாத இடத்தில் ரோபோ அந்தப் பள்ளியின் குழந்தைகளுக்கு டிஜிட்டல் முறையில் கணிதத்தை கற்பிக்கும். உலகின் எந்த மொழியிலும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் திறன் இதற்கு உள்ளது. பாடம் தவிர, இந்த ரோபோ ஒரு பாட்டுப் பாடும், நடனமாடும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தும், கதைகள் சொல்லும், பொது அறிவு கேள்விகளுக்கும் பதிலளிக்கும். ரோபோ மூலம் கற்பதால் மாணவர்கள் ஆர்வமுடன் அறிவியலை கற்றுக்கொள்வார்கள்.
STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) கருத்துகளை மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான சிறந்த தளமாக இந்த ஆய்வகம் செயல்படும். இது, தேசிய கல்விக் கொள்கை 2020இன் படி, பிரச்னைகளைத் தீர்க்கும் திறனிலும், விமர்சன சிந்தனையிலும் அவர்களின் திறமையை அதிகரிக்கும் என்றும், அமைச்சர் வி.சோமண்ணாவின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் நன்கொடையாளர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் போட்டி: பிரதமர் வருகை - சென்னையில் போக்குவரத்து மாற்றம்!