ரூர்க்கி: இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் இருக்கும் தனது வீட்டுக்கு Marcedes Benz GLC Coupe என்ற காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஹரித்துவார் மாவட்டத்தில் டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து டிவைடரில் மோதி தீப்பிடித்துள்ளது.
அதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், காரில் ஏற்பட்ட தீயை போராடி அணைத்தனர். படுகாயமடைந்த ரிஷப் பந்த்தை சக்ஷாம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு நெற்றி மற்றும் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிளாஸ்டிக் சர்ஜரிக்காக டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டதாக மருத்துவமனை தலைவர் மருத்துவர் சுஷீல் நாகர் தெரிவித்துள்ளார். அதன்பின் ரிஷப் பந்த், டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட மாஜிஸ்திரேட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மேக்ஸ் மருத்துவமனையின் மருத்துவர் ஆஷிஷ் யாக்னிக் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், எலும்பியல் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்களின் கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவ அறிக்கை பின்னர் வெளியிடப்படும்” என்றார்.
இதுகுறித்து உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், துரதிர்ஷ்டவசமான சாலை விபத்தில் காயமடைந்தது பற்றிய செய்தி கிடைத்தது. அவரின் சிகிச்சைக்கான முழுமையான ஏற்பாடுகளை உறுதி செய்யுமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. அவர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
அதேபோல் சிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தின் விபத்து குறித்து அறிந்து மிகவும் கவலையடைந்தேன். அவர் ஒரு நம்பிக்கைக்குரிய கிரிக்கெட் வீரர். அவர் அணிக்கான ஒரு சொத்து. அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அவர் விரைவில் மைதானத்துக்கு திரும்ப வேண்டும்” என கூறியுள்ளார்.
பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, “எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் ரிஷப் பந்த் மீண்டு வரும் வழியில் போராடும்போது அவருடன் உள்ளன. அவரது குடும்பத்தினரிடமும், அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடமும் பேசினேன். ரிஷப் உடல்நிலை சீராக உள்ளது மற்றும் ஸ்கேன் செய்யப்பட்டு வருகிறது. அவரது முன்னேற்றத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அவருக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவோம்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலே மறைவு