ஹைதராபாத்: சீக்கியர்களுக்காக காலிஸ்தான் என்ற தனி நாட்டை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை புதிதல்ல. 1980ம் ஆண்டே இதற்கான போராட்டம் பஞ்சாபில் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தை மீண்டும் நினைவுகூர வைத்திருக்கிறார் காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால். தனது உதவியாளர் டூஃபன் சிங்கை விடுவிக்க கோரி, கடந்த வியாழக்கிழமை ஆதரவாளர்களுடன் கத்தி, வாள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன், அஜ்னாலா காவல் நிலையத்தை முற்றுகையிட்டார் அம்ரித்பால். இப்போராட்டம் பஞ்சாப் மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
கூடிய பெருங்கூட்டம்: 29 வயது பொறியாளரான அம்ரித்பால் சிங், தனது ஆதரவாளர்களை திரட்டியதுடன், காலிஸ்தான் தனி நாடு கோரிக்கையை எழுப்பியுள்ளார். அம்ரித்பாலின் வேண்டுகோளை ஏற்று, அஜ்னாலா பகுதியில் பெருங்கூட்டம் கூடியதை போலீசாரால் நம்ப முடியவில்லை. போலீசார் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினாலும், கைதான டூஃபன் சிங் எந்த குற்றமும் செய்யவில்லை, அவர் விடுவிக்கப்படுவார் என அறிவித்தார் டிஜிபி. அதன்பிறகே போராட்டம் முடிவுக்கு வந்து, இயல்புநிலை திரும்பியது.
நினைவுக்கு வரும் 1981: டிஜிபியின் இந்த அறிவிப்பு, 1981ம் ஆண்டு காலிஸ்தான் ஆதரவு தலைவர் ஜர்னைல் சிங் பிந்த்ராவாலே விடுவிப்பை நினைவுகூர வைக்கிறது. ஜர்னைல் சிங் கைது செய்யப்பட்ட போது அவரது ஆதரவாளர்கள் பெரும் போராட்டம் மற்றும் வன்முறையில் இறங்கினர். இதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார். இந்திரா காந்தி தலைமையிலான அப்போதைய மத்திய அரசில், உள்துறை அமைச்சராக இருந்தவர் சயில் சிங். நாளிதழின் உரிமையாளர் கொலை வழக்குக்கும், ஜர்னை சிங்குக்கும் தொடர்பு இல்லை என, சயில் சிங் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார்.
ஜர்னைல் சிங் விடுவிக்கப்பட்டது காலிஸ்தான் ஆதரவு சக்திகளுக்கு பெரும் உற்சாகத்தை அளித்தது. என்றாலும், அதன்பின் நடைபெற்ற ஆபரேஷன் புளு ஸ்டார் (பொற்கோயிலுக்குள் இருந்த சீக்கியர்கள் மீதான தாக்குதல்) நடவடிக்கை, இந்திரா காந்தி படுகொலை ஆகியவை தீராத வடுக்களை ஏற்படுத்தின. அதன்பின் காலிஸ்தான் தனி நாடுக்கான ஆதரவு குரல்கள் சற்று தணிந்திருந்தாலும், தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
மிரட்டல் விடுக்கும் அம்ரித்பால்: ஜர்னைல் சிங்கை போலவே உடையணிந்து, அவரை போலவே முழக்கங்களை எழுப்பிகிறார் அம்ரித்பால் சிங். பஞ்சாப் பிரிவினை வாதத்தின் புதிய கதிராக முளைத்துள்ள அம்ரித்பாலை, பெரும்பாலோர் ஒரு பொருட்டாக பார்க்கவில்லை. எனினும் அவரது மிரட்டல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தனது ஆதரவாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். எனினும் சிறிது நாட்கள் அம்ரித்பாலை கண்டுகொள்ள வேண்டாம் என மத்திய அரசும், பஞ்சாப்பை ஆளும் ஆம் ஆத்மி அரசும் முடிவு செய்திருப்பது தெளிவாக தெரிகிறது. அம்ரித்பாலின் நடவடிக்கை இந்து மக்களை ஒன்றிணைக்கும் வேளையில், சீக்கியர்கள் மத்தியில் பிரிவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
ஆதாயம் தேடும் கட்சிகள்?: மதசார்பற்ற சீக்கியர்கள் நடுநிலைமையில் செல்வார்கள். மதவாத சீக்கியர்கள் அம்ரித்பாலை தேர்வு செய்வார்கள். 40 சதவீதம் இருக்கும் இந்துக்கள் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸை ஏற்க மாட்டார்கள். அவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு பாஜக மட்டும்தான். பஞ்சாப் மாநிலத்தில் காலூன்ற பாஜக தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. கேப்டன் அமரீந்தர் சிங் போன்ற தலைவர்களை, மக்களவை தேர்தலுக்காக தற்போதை தயார்படுத்தி வருகிறது.
அம்ரித்பாலின் காலிஸ்தான் ஆதரவு முழக்கம், பாஜகவுக்கு சாதகமாக இருக்கும். அம்ரித்தின் எழுச்சி, கட்சிக்கு இந்து மதத்தினரின் வாக்குகளை ஒருங்கிணைக்க உதவும். அம்ரீந்தர் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள், சீக்கியர் வாக்குகளை பாஜகவுக்கு திரட்ட முயற்சிப்பார்கள். அதே நேரம் தற்போதையை சூழலை கெஜ்ரிவால் அமைதியாக கவனித்து வருகிறார். ஏனென்றால் நிலைமை அவர்களது கை மீறி சென்றுவிட்டால் என்ன நடக்கும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.
அஜித் தோவலை போன்ற பாதுகாப்பு அதிகாரிகளை பெற்றுள்ள மத்திய அரசு, வரும் மக்களவை தேர்தலில் காலிஸ்தான் இயக்கம் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு அளிக்கும் வரை காத்திருக்குமா, அல்லது அதற்கு முட்டுக்கட்டை போடுமா என்பது விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது.
இதையும் படிங்க: சத்தீஸ்கர்: நக்சல்கள் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் வீரமரணம்