மும்பை : நடப்பு நிதி ஆண்டில் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை என்றும் 6 புள்ளி 5 சதவீதம் என்ற வட்டி நிலையே தொடரும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. இதனால் வீடு, வாகனம் உள்ளிட்ட பல்வேறு கடன்களின் வட்டி விகிதங்கள் உயராது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நடப்பாண்டுக்கான ரிசர்வ் வங்கியின் மூன்று நாட்கள் நிதிக் கொள்கை கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் மூத்த வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து, நடப்பாண்டு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கு வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார்.
குறுக்கிய கால கடன்களுக்கான ரிப்போ வட்டி விகிதம் 6.5 விகிதத்திலேயே தொடரும் என அவர் தெரிவித்தார். பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் அதேவேளையில் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்காமல் இருக்க ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரிக்காமல் அதே நிலையில் நீடிக்கச் செய்து உள்ளதாக ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
இந்த நிதிக் கொள்கை கூட்டத்தில் ஆறில் ஐந்து உறுப்பினர்கள் நாட்டின் பொருளாதாரத்தை மீட்கவும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாகவும் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்த மறுப்பு தெரிவித்ததாக சக்திகாந்த தாஸ் தெரிவித்து உள்ளார். 2023 -24 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதமான ஜிடிபி 6 புள்ளி 5 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டு உள்ளதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
அதேநேரம் நடப்பாண்டுக்கான பணவீக்க விகிதம் 5 புள்ளி 2 சதவீதமாக சரிய வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சீரிய வேகத்தில் இருப்பதாகவும், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6 புள்ளி 5 சதவீதமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
நாட்டின் மொத்த பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் இலக்குகளை காட்டிலும் அதிகமாக இருப்பதாகவும், அதே நேரம் இந்தியாவில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், வங்கி சாராத நிதி நிறுவனங்களின் செயல்பாடுகள் நல்ல நிலையில் இருப்பதாகவும் அர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு தற்போதைய சூழலில் வட்டி விகிதத்தில் எந்த வித மாற்றமும் இல்லை என்றார். அதேநேரம் வரும் காலத்தில் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படலாம் என்றும் அவர் கூறினார். ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உடனடியாக உயர்த்துவதற்கான வாய்ப்புகள் குறைவு. இதனால் வீடு, வாகனம் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி தற்போது உயர வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : சென்னையில் சிகிச்சை பெற்ற ஜார்கண்ட் கல்வி அமைச்சர் மறைவு - அமைச்சர் மா.சு நேரில் அஞ்சலி!