டெல்லி: கரோனாவுக்கு எதிரான போரில், தடுப்பூசி முக்கிய ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 25 கோடியே 90 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, தடுப்பூசியின் (Vaccination) செயல்திறன் ஆறு மாதங்களுக்கு நீடிக்கும். இந்தத் தடுப்பூசி பல ஆண்டுகளுக்கு நம் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பலப்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.
இந்நிலையில், கோவிட்-19 தடுப்பூசிகளின் நீண்ட செயல்திறனைப் பராமரிக்க பூஸ்டர் டோஸ் தேவையா, இல்லையா என்கிற ஆராய்ச்சி, இந்தியா, அமெரிக்கா உள்பட பல நாடுகளில் நடைபெற்றுவருவதாக எய்ம்ஸ் மருத்துவர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டு, ஐந்து மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளோர் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் அல்லது பூஸ்டர் டோஸ் தேவையா என்கிற கேள்வியுடன் அரசையும், விஞ்ஞானிகளையும் அனைவரும் எதிர்நோக்கியுள்ளனர்.
இது தொடர்பாக இந்தியா, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. இரண்டு அல்லது மூன்று மாதங்களில் புதிய தரவுகள் கிடைத்துவிடும். அதன் பிறகே, பூஸ்டர் டோஸ் தயாரிப்பு குறித்து முடிவுசெய்யப்படும்.
டெல்லி எய்ம்ஸில் பூஸ்டர் டோஸ் குறித்த ஆராய்ச்சி நடைபெற்றுவருகிறது. இது மிகவும் முக்கியமான நேரம், மக்கள் கவனமாக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 6 முதல் 12 வயது சிறார்களுக்கு கோவாக்சின் பரிசோதனை