பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பஞ்சாபின் பல்வேறு நகரங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் வீடுகள் சேதமடந்து உள்ளன. பலரது வீடுகளில் மேல் கூரையே இல்லை. அவர்களுக்கு பல்வேறு சமூக சேவை அமைப்புகள் உதவி வருகின்றன. சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த போர் வீரர்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளின் மூலை முடுக்குகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் வழங்குகிறார்கள். சட்லஜ் நதியின் (Sutlej River) நீர்மட்டம் உயர்ந்து வருவதால் சில பகுதிகளில் நிலைமை மோசமாகி வருகிறது.
ஜலாலாபாத் பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் சில கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. சுமார் 20 கிராமங்களைச் சேர்ந்த 250 ஏக்கருக்கும் அதிகமான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள முள்வேலியும் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
மேலும், பாகிஸ்தான் தனது 10 வாயில்களில் 6 கதவுகளைத் திறந்துள்ளது. மறுபுறம், பாட்டியாலாவில் உள்ள 70க்கும் மேற்பட்ட கிராமங்களிலும், நகரின் 15க்கும் மேற்பட்ட காலனிகளிலும் கடந்த 4 நாட்களாக வெள்ளப்பெருக்கால் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் இருந்து மக்கள் சிறிது நிவாரணம் பெற்றுள்ளனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. மேலும், சங்ரூர் கானுரி மற்றும் முனாக் பகுதி வழியாக செல்லும் காகர் நதியின் (Ghaggar River) நீர் மட்டம் அபாயக் குறியான 750 அடியை விட 1.3 அடி அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் முழுவதும் இன்று ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் மீட்புப் பணியின் வேகம் குறைய வாய்ப்புள்ளது. ஆனாலும் இந்த மீட்பு நடவடிக்கையின் போது, சற்றும் மனம் தளராமல் பஞ்சாப் இளைஞர்கள் இந்தப் பேரிடரில் இருந்து மக்களைக் காப்பாற்றுவது தங்கள் கடமை என்று கருதி NDRF, SDRF, Army, BSF அவர்களுடன் இணைந்து மீட்புப் பணியாற்ற முன்வந்துள்ளனர்.
மறுபுறம், எஸ்ஐ அபிஷேக் சர்மா, கான்ஸ்டபிள் ரிங்கு குமார் மற்றும் கான்ஸ்டபிள் பிங்கி ராணி ஆகியோர் மொஹாலி வால்மீகி காலனியில் வசிக்கும் 200க்கும் மேற்பட்டோரை மீட்டனர். இதற்கிடையில், மச்சிவர பகுதியில் புலம்பெயர்ந்த கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலியால் அவதிப்பட்டபோது, அவருக்கு உடனடி மருத்துவ உதவி வழங்கப்பட்டது. இதனை அடுத்து அந்த பெண் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தற்போது குழந்தை மற்றும் தாய் இருவரும் பாதுகாப்பாக உள்ளனர்.
இந்த நிலையில், PB 65 BB 4893 என்ற பதிவு எண் கொண்ட PRTC சண்டிகர் டிப்போ பேருந்து மணாலி சாலையில் இருந்து புறப்பட்டது. ஆனால், இந்தப் பேருந்து மணலிக்கு வரவே இல்லை. பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரின் தொலைபேசி எண்களும் தொடர்புகொள்ளமுடியாத நிலையில் உள்ளது. இதனால், பேருந்து பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆகவே தற்போது, PRTC ஊழியர்கள் அந்த பேருந்தின் படத்தைப் சமூக வலைதளங்களில் பகிருமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த வெள்ளத்தில் பஞ்சாபின் பாட்டியாலா, ரோபர், ஜலந்தர் பகுதிகள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் இதுவரை 11க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கான விலங்குகளும் உயிரிழந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கி தங்களை பாதுகாத்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள மாநில நிர்வாகம், வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு எளிய முறையில் உதவ முழு ஒத்துழைப்புத் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: பிரான்ஸ், ஐக்கிய அரபு நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் புறப்பட்டார் பிரதமர் மோடி