டெல்லி: 2022ஆம் ஆண்டின் உலகின் சிறந்த சிறந்த வேலை அளிப்போர் தரவரிசை பட்டியலை பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. ஊழியர் நலன், திறன் மேம்பாடு, பாலின சமத்துவம், சமூகப்பொறுப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்தப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ஸ்டேடிஸ்டாவுடன் சேர்ந்து ஃபோர்ப்ஸ் பத்திரிகை இந்தப்பட்டியலை தயாரித்துள்ளது. இதில் மொத்தம் 800 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் தென்கொரிய நிறுவனமாக சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் முதலிடத்திலும், அமெரிக்காவின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இரண்டாவது இடத்திலும் உள்ளது. ஐபிஎம், ஆல்பாபெட், ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் 3, 4, 5ஆகிய இடங்களில் உள்ளன. தரவரிசையில் 2 முதல் 12 இடங்கள் வரை, அமெரிக்க நிறுவனங்கள் உள்ளன.
ஜெர்மனி வாகன உற்பத்தி நிறுவனமாக பிஎம்டபிள்யு குழுமம் 13ஆவது இடத்திலும், அமேசான் 14ஆவது இடத்திலும், பிரான்ஸ் நிறுவனமாக டெக்கத்லான் 15ஆவது இடத்திலும் உள்ளது. ரிலையன்ஸ் இந்தியா நிறுவனம் 20ஆவது இடத்தில் உள்ளது. பென்ஸ், கோக கோலா, ஹோண்டா, யமகா ஆகிய நிறுவனங்கள் ரிலையன்ஸ்க்கு பின்வரிசையில் உள்ளன.
இந்தப்பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தவிர, வேறு எந்த இந்திய நிறுவனமும் இடம்பெறவில்லை. எச்டிஎஃப்சி வங்கி 137ஆவது இடத்திலும், பஜாஜ் 173ஆவது இடத்திலும், ஆதித்யா பிர்லா குழுமம் 240ஆவது இடத்திலும், ஹீரோ மோட்டோகார்ப் 333ஆவது இடத்திலும் உள்ளது.