டெல்லி: மத்திய அரசு பணிகளுக்கு ஊழியர்களை நியமிக்கும் "ரோஸ்கர் மேளா" திட்டத்தின் கீழ் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பொறியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 71,426 பேர் புதிதாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று(ஜன.20) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக கலந்து கொண்டு, புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பின்னர் புதிய பணியாளர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், " வேலை வாய்ப்புகளை வழங்கும் 'ரோஸ்கர் மேளா' மத்திய அரசின் அடையாளமாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த மேளா, பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் உள்ள பல மாநிலங்களில் நடத்தப்பட்டுள்ளன. பிற மாநிலங்களிலும் விரைவில் ஏற்பாடு செய்யப்படும்.
புதிதாக பணியமர்த்தப்பட்டுள்ள நீங்கள் மக்களுக்கு சேவை செய்வதில் உறுதியாக இருக்க வேண்டும். வணிகத்தைப் பொருத்தவரை நுகர்வோர் கூறுவது எப்போதும் சரி என்பதைப் போல, நிர்வாக அமைப்பில் மக்கள் கூறுவது எப்போதும் சரி என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது அரசுப்பணிக்கு தேர்வாகியுள்ளவர்களில் பெரும்பாலானோர், முதல் தலைமுறையாக அரசுப்பணிக்கு வருபவர்கள். வெளிப்படையான ஆட்சேர்ப்பு முறை தகுதியான மற்றும் திறமையான ஊழியர்களை தேர்வு செய்கிறது. நாட்டின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன" என்றார்.
இதையும் படிங்க: கேரளாவில் கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு