சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களிலும், தேர்தல் பறக்கும் படையினர் பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக, 272 தொகுதிகளில் பணப்பட்டுவாடா அதிகம் இருக்க வாய்ப்புள்ளதாகத் தேர்தல் ஆணையம் கருதியுள்ளது. இந்த 272 தொகுதிகளில் தமிழ்நாட்டில் மட்டுமே 118 தொகுதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் தேதி அறிவித்தவுடனே, தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதனால், தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள தொகைக்கு மேலான பணத்தை, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லக்கூடாது.
அந்த வகையில், இந்தாண்டு மார்ச் 16 ஆம் தேதி வரை, தேர்தல் பறக்கும் படையினர் நடத்தியுள்ள சோதனையில் 333. 47 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முந்தைய 2016 சட்டப்பேரவை தேர்தலுடன் ஒப்பிடுகையில், 225.77 கோடி ரூபாய் மதிப்புடைய பொருள்கள் மட்டுமே கைப்பற்றப்பட்டிருந்தன. எனவே, இந்தாண்டு பணப்பட்டுவாடா அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஐந்து மாநிலங்களில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், தமிழ்நாட்டில் தான் அதிகளவிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து, அடுத்த இடத்தில் மேற்கு வங்க மாநிலம் உள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விவரம்: குறிப்பு (மார்ச் 16 வரை)
மாநிலம் | பணம் (கோடி) | மதுபானம் (கோடி) | போதை பொருள் (கோடி) | இலவசம் (கோடி) | ஆபரணங்கள் (கோடி) | மொத்த தொகை (கோடி) |
அஸ்ஸாம் | 11.73 | 17.25 | 27.09 | 4.87 | 2.82 | 63.75 |
புதுச்சேரி | 2.32 | 0.26 | 0.15 | 0.14 | 2.85 | 5.72 |
தமிழ்நாடு | 50.86 | 1.32 | 0.35 | 14.06 | 61.04 | 127.64 |
கேரளா | 5.46 | 0.38 | 0.68 | 0.04 | 15.23 | 21.77 |
மேற்கு வங்கம் | 19.11 | 9.72 | 47.40 | 29.42 | 6.93 | 112.59 |
மொத்தம் | 89.48 | 28.93 | 75.67 | 48.52 | 88.87 | 331.47 |
இதையும் படிங்க: பொய்யான தேர்தல் அறிக்கை மூலம் மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடிப்பவர்கள் திமுக- அமைச்சர் ஓ.எஸ். மணியன்