டெல்லி: தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து பல்வேறு மாநிலங்களும் புகார் கூறிவந்த நிலையில், ஜூலை 21ஆம் தேதி முதல் மூன்று வாரங்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மத்திய அரசின் சார்பில் இலவச கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இன்று முதல் கரோனா தடுப்பூசி வழங்கும் புதிய திட்டத்தை ஒன்றிய அரசு தொடக்கிவைத்தது.
இவ்வேளையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்குக் கடந்த 24 மணி நேரத்தில், 69 லட்சம் பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதற்கு முன்னதாக ஏப்ரல் 2ஆம் தேதி ஒரே நாளில் 42,65,157 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டதே அதிகப்படியான எண்ணாக இருந்தது.
இது தொடர்பாக இன்று (ஜூன் 21) காலை பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், "அனைவருக்கும் இலவச தடுப்பூசி திட்டம் இன்று முதல் தொடங்குகிறது. இந்தியாவின் இந்த தடுப்பூசித் திட்டத்தின் மிகப்பெரிய பயனாளியாக ஏழை எளிய மக்கள், நடுத்தர மக்கள் மற்றும் இளைஞர்கள் இருப்பர். நாம் ஒவ்வொருவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள உறுதியேற்க வேண்டும். நாம் ஒன்றிணைந்தால் கரோனாவை விரட்டலாம்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், ஒவ்வொரு மாநிலமுமே அன்றாடம் தடுப்பூசி செலுத்தப்படுவோரின் எண்ணிக்கை குறித்து இலக்கு நிர்ணயித்துள்ளது. அசாமில், அடுத்த 10 நாட்களில் 3 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தினந்தோறும் 7 லட்சம் பேருக்குத் தடுப்பூசி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மாநிலங்களுக்கு 29.10 கோடி (29,10,54,050) தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இன்றைய நிலவரப்படி மாநிலங்களின் வசம் 3.06 கோடி தடுப்பூசிகள் இருப்புள்ளன. அடுத்த மூன்று நாட்களில் 24,53,080 தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
ஜூன் 21 காலை 7 மணி நிலவரப்படி இந்தியா முழுவதும் 28,00,36,898 கோடி பேருக்கு, கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.