மும்பை: மகாராஷ்டிரா அரசியலில் நெருக்கடி நிலை நீடித்து வந்த நிலையில் ஆட்சியிலிருந்த முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். சிவசேனா கட்சியிலிருந்து அதிருப்தி தெரிவித்த, மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எம்எல்ஏக்கள் ஆதரவு அதிகரித்தது. இதனால் மகா விகாஸ் அகாதி கூட்டணி கவிழ்ந்தது.
அந்த வகையில், மகாராஷ்டிர மாநில புதிய முதலமைச்சராக சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே நேற்று (ஜூன் 30) பதவியேற்றுக் கொண்டார். எதிர்க்கட்சி தலைவராகயிருந்த பாஜகவின் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க வழக்கு முடியும் வரை அவர்களை சட்டப் பேரவைக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக கட்சியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து ஷிண்டே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்கள் 16 பேரை ஜூலை 11ஆம் தேதி வரை தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜூலை 11 வரை அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது