ஐஸ்வால்: வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம் இடையே எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. இரு மாநிலங்களும் சுமார் 164 கிலோ மீட்டர் எல்லையைப் பகிர்ந்து வருகின்றன. இதன் காரணமாக, அவ்வப்போது இரு மாநிலங்களுக்கு இடையே மோதல் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், இரு மாநில எல்லையில் கடந்த 26ஆம் தேதி வன்முறை வெடித்தது. இரு மாநிலங்களைச் சேர்ந்த மக்களும், காவல் துறையினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். து
இந்த வன்முறைச் சம்பவத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 6 காவல் துறை அலுவலர்கள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். அசாம் முதலமைச்சரும், மிசோரம் முதலமைச்சரும் வெளிப்படையாக வாக்குவாதம் செய்து, ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொண்டனர்.
இந்தச் சூழலில் அசாம் முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, 4 காவல் உயர் அலுவலர்கள், இரு அலுவலர்கள் மீது மிசோரம் போலீஸார் கிரிமினல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது தவிர அடையாளம் தெரியாத அசாம் காவல் துறை 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அசாம் முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை திரும்பப் பெற தயாராக உள்ளது என மிசோராம் தலைமைச் செயலாளர் லால்நுன்மாபியா சுவாங்கோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், " எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த காவல் துறை அலுவலருடன் விவாதித்து, அதில் சட்டரீதியான பொருத்தம் இல்லாத பட்சத்தில், அசாம் முதலமைச்சரின் பெயரை எஃப்.ஐ.ஆரில் இருந்து நீக்க தயாராக உள்ளோம்.
அசாம் முதலமைச்சரின் பெயரை எஃப்.ஐ.ஆரில் பதிவிட எங்கள் முதலமைச்சர் உண்மையாகவே விரும்பவில்லை. இவ்விவகாரத்தை என்னை பார்த்துக்கொள்ள முதலமைச்சர் கூறியுள்ளார்" என்றார்.
மற்ற உயர் அலுவலர்கள், 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து தலைமைச் செயலாளர் லால்நுன்மாபியா எதுவும் தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மூன்றாம் அலையை கட்டுப்படுத்தும் ‘மும்பை பிளஸ்’ திட்டம்