புதுச்சேரி: முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்ப பெற கோரி 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினருடன் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ராஜீவ் காந்தி சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி மீது வழக்கு பதிந்து எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்துள்ள மத்திய மோடி அரசை கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் உள்பட 100-க்கும் மேற்பட்ட காங்கிரசார் கலந்துகொண்டனர். மக்கள் விரோதமாக செயல்படும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் பிரதமர் நரேந்திர மோடியை கடிந்து கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.
அண்ணா நகரில் தொடங்கிய பேரணியானது முக்கிய வீதியிலான திருவள்ளுவர் சாலை, காமராஜர் சாலை வழியாக ராஜிவ்காந்தி சிலை அருகே நிறைவடைந்தது. இந்த பேரணி ராஜீவ் காந்தி சிலையில் நிறைவு பெற்ற போது முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
50-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை மறித்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் அரை மணி நேரம் புதுச்சேரி - சென்னை - கடலூர் சாலை சந்திப்பில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனை அடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லாததால். முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், உள்பட 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க:"ஒரு தியாகியின் மகனை துரோகி என்று கூறுவதா?" - பிரியங்கா காந்தி ஆவேசம்!