டெல்லி : மாநிலங்களவையில் கடும் அமளிக்கு மத்தியில் விமான போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேசினார். விமான நிறுவனங்கள் ஏலம் தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “மக்கள் எளிதில் அணுகும்வகையில் விமான கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும், விமானங்களுக்கான அடுத்த சுற்று ஏலம் விரைவில் நடைபெறும்” என்றார்.
தொடர்ந்து நாட்டின் ஸ்மார்ட் (சீர்மிகு) நகரங்கள் குறித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், “ அம்ருத் (AMRUT) திட்டத்தின் கீழ் வடிகால் அமைப்புகள் தடைபட்டுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும். ஸ்மார்ட் நகரங்களைப் பற்றி, 100 திட்டங்கள் அந்தந்த மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டன” என்றார்.
இதற்கிடையில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபையின் மத்தியில் வந்து முழக்கங்களை தீவிரப்படுத்தினர். அப்போது அவர்கள் “வேவு பார்ப்பதை நிறுத்து” உள்ளிட்ட பதாகைகளை கைகளில் பிடித்திருந்தனர்.
இந்நிலையில், திருச்சி சிவா, கரீம் உள்ளிட்ட எம்பிகள் அவை ஒழுங்காக இல்லை எனக் கூறி கேள்வி கேட்க மறுத்துவிட்டனர். இந்த அமளிக்கு மத்தியில் மரைன் எய்ட்ஸ் டு நேவிகேஷன் மசோதா 2021 செவ்வாய்க்கிழமை குரல் வாக்கு மூலம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க : ராகுல் டிராக்டர் பேரணி- டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு!