ஹைதராபாத்: சமீபத்தில் மறைந்த மூத்த தெலுங்கு நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கிருஷ்ணம் ராஜுவின் குடும்ப உறுப்பினர்களை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திக்கிறார். மேலும் செப்டம்பர் 16ஆம் தேதி நடைபெறும் இரங்கல் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்கிறார்.
கிருஷ்ணம் ராஜுவின் மருமகனான நடிகர் பிரபாஸ், ராஜுவின் குடும்ப உறுப்பினர்களை ராஜ்நாத் சிங் சந்திக்கும் போது பிரபாஸும் கலந்து கொள்வார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணம் ராஜு (83) செப்டம்பர் 11ஆம் தேதி காலமானார். இரண்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்த அவர், அடல் பிஹாரி வாஜ்பாய் அரசில் மத்திய இணை அமைச்சராகப் பணியாற்றினார்.
'ரெபெல் ஸ்டார்' என்று அழைக்கப்படும் ராஜு 180 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கலகத்தனமான கதாபாத்திரங்கள் மூலம் ஒரு டிரெண்ட் செட்டராக இருந்தார். 1966 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான 'சிலகா கோரிங்கா' மூலம் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார்.
‘பக்த கண்ணப்பா’, ‘கடகதல ருத்ரய்யா’, ‘பொப்பிலி பிரம்மண்ணா’ மற்றும் ‘தந்திர பாபராயுடு’ ஆகியவை அவருடைய பிரபலமான சில திரைப்படங்களாகும். பிரபாஸ் நடித்த 'ராதே ஷ்யாம்' கிருஷ்ணம் ராஜு நடித்த கடைசி படமாகும்.