ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு(SCO) சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவின் கட்டுமானத்தில் பெண்களின் பங்களிப்பு குறித்து பேசினார்.
அவர் பேசியதாவது, "பெண்கள் சக்தியை தேச வளர்ச்சிக்கு இந்தியா காலங்காலமாக பயன்படுத்திவருகிறது. நாட்டை பாதுகாக்க பெண்கள் ஆயுதம் ஏந்திய வரலாறும் இந்தியாவில் உண்டு. அதில் ராணி லக்ஷ்மி பாய் சிறந்த உதாரணம்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாட்டை பல ஆண்டுகள் ஆட்சி செய்தார் என்பது மட்டுமல்ல. போர் காலத்தில் முன்னின்று நடத்தி வெற்றியை ஈட்டித்தந்தார். முதல் பெண் குடியரசுத் தலைவரான பிரதீபா பாட்டில் நாட்டின் முப்படைகளையும் தலைமை தாங்கியுள்ளார்.
பெண்கள் கருணை மிக்கவர்களாக மட்டுமல்லாது, நாட்டை பாதுகாக்கும் பணியிலும் சிறந்து விளங்குகின்றனர். ராணுவத்தில் பெண்களுக்கு சம அந்தஸ்து கிடைக்கும் வகையில், உயர் அலுவல் பணிகளில் பெண்களையும் நிரந்தரமாக பணியமர்த்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
காவல்துறை, மத்திய காவல்படை, துணை ராணுவம், ராணுவம் என அனைத்து தளத்திலும் பெண்கள் சிறப்பாக சேவையாற்றி வருகின்றனர்" எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மாதம் ரூ.5,000 நிதியுதவி