ராஜ்கோட்: குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கேயூர் மல்லி, தென் ஆப்பிரிக்காவில் கடத்தப்பட்டு, ரூ.30 லட்சம் கொடுத்தப் பின்பு விடுவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கேயூர் மல்லி ஈடிவி பாரத் ஊடகத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "நான் ஏற்றுமதி-இறக்குமதி தொழிலில் ஈடுபட்டுவருகிறேன்.
அதற்காக பல நாடுகளுக்கு சென்று வருவது வழக்கம். அந்த வகையில், தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் விமான நிலையத்துக்கு ஜனவரி 20ஆம் தேதி சென்றேன். அதன்பின் விமான நிலையத்துக்கு வெளியே ஒரு டாக்ஸியை பிடித்தேன். அந்த டாக்ஸியில் 4 பேர் இருந்தனர்.
நான் குறிப்பிட்ட இடத்துக்கு செல்லாமல் வேறு வழியில் சென்றனர். அவர்களிடம் கேட்டபோது எனக்கு மிரட்டல் விடுக்க தொடங்கினர். சில நிமிடங்களில் நான் கடத்தப்பட்டதை உணர்ந்தேன். அதன்பின் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் டாக்ஸியை நிறுத்தி ரூ.1.5 கோடி பணம் கேட்டு மிரட்ட தொடங்கினர்.
பயத்தில் வீட்டிற்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினேன். அப்போது 4 பேரும் தங்களை பாகிஸ்தானி என்று அடையாளப்படுத்திக்கொண்டனர். அவர்களிடம் நீண்ட நேரம் கெஞ்சியப்பின் ரூ.30 லட்சம் கொடுக்க சம்மதித்தனர். அதனடிப்படையில் எனது தந்தை ரூ.30 லட்சம் பணத்தை அவர்கள் சொன்ன வங்கி எண்ணுக்கு அனுப்பிய பின் என்னை மீண்டும் ஜோகன்னஸ்பர்க் விமான நிலையத்தின் அருகில் விட்டு சென்றனர்.
இதையடுத்து தென்னாப்பிரிக்க காவல்துறை என்னை மீட்டு மருத்துவ பரிசோதனை செய்த பின்பு, மீண்டும் ராஜ்கோட்டுக்கு அனுப்பி வைத்தனர்" எனத் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து கேயூர் மல்லியின் தந்தை பிரபுல்லாபாய் மல்லி கூறுகையில், "எனது மகன் கடத்தப்பட்டதாக எனக்கு செல்போன் அழைப்பு வந்த உடனேயே ராஜ்கோட் காவல்துறையைத் தொடர்பு கொண்டேன்.
அவர்கள் தென் ஆப்பிரிக்கா காவல்துறையைத் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கியுள்ளனர். அதனடிப்படையில் தேடுதல் வேட்டை தொடங்கியிருக்க வேண்டும். அடுத்த 24 மணி நேரத்தில் 4 பேரையும் தென் ஆப்பிரிக்கா காவல்துறையினர் கைது செய்துவிட்டனர். ஆனால், ரூ.30 லட்சம் பணம் திரும்ப கிடைக்கவில்லை.
விரைவில் பணம் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ராஜ்கோட் காவல்துறை உத்தரவாதம் அளித்துள்ளது. இந்த சம்பவத்தில் உடனடி நடவடிக்கை எடுத்த இந்திய தூதரகம், ராஜ்கோட் மற்றும் தென் ஆப்பிரிக்க காவல்துறைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கும் நன்றிகள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நிலத் தகராறு காரணமாக வெறிச்செயல்.. சார்-பதிவாளர் அலுவலகம் முன்பு நடந்த கொடூரம்..