ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்திலுள்ள பனோரியா கிராமத்தைச் சேர்ந்தவர், கஜேதன் சரண் (35). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு, நேற்று (மார்ச்3) வருமான வரித்துறையினரிடமிருந்து ஒரு நோட்டீஸ் வந்துள்ளது. அதில், கஜேதன் சரண் 32 கோடியே 63 லட்ச ரூபாய் பண பரிவர்த்தனை செய்ததாகவும், அதனால் ரூபாய் 4 கோடியே 89 லட்ச ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
வருமான வரித்துறை நோட்டீஸ்
பொதுவாக வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல காரணங்களுக்காக வருமான வரித்துறை ஒருவருக்கு நோட்டீஸ் அனுப்ப வாய்ப்பு உள்ளது. அதில், உயர் மதிப்பு கொண்ட பணப் பரிவர்த்தனைகளும் அடங்கும். அந்த வகையில் தான் ஓட்டுநர் கஜேதன் சரணுக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் முரண் என்னவென்றால், சரணுடைய மாத வருமானமே வெறும் பத்தாயிரம் ரூபாய் தான்.
பணப் பரிமாற்றம்
இது தொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய கஜேதன் சரண், ’என்னுடைய பான் கார்டு, ஆதார் கார்டு இரண்டையும் யாரோ ஒருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். 32.63 கோடி ரூபாய் என்பது எனக்கு பெரிய தொகை. இந்தப் பணப் பரிவர்த்தனை யார் செய்தார் என்பது குறித்து எனக்கு எவ்வித தகவலும் தெரியவில்லை. நாள் முழுக்க ஆட்டோ ஓட்டினாலும், மாதம் 10 ஆயிரம் ரூபாய் தான் எனக்கு வருமானம். இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறேன். உண்மையில் யார் பண பரிவர்த்தனை செய்தார்களோ அவர்களை காவல்துறை கண்டுபிடிக்கும்’ என்றார்.
பல முறை வலியுறுத்தியும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என சரண் தெரிவித்தையடுத்து, இது தொடர்பாக பார்மர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நர்பத் சிங்கிடம் கேட்டோம்.
அவர், ’கஜேதன் தெரிவித்த புகாரின் அடிப்படையில், ஆவண மோசடி பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்குப்பதிவு செய்ய கால தாமதம் ஆன காரணத்தால் விசாரணை சற்று தாமதப்பட்டுள்ளது’ என்றார்.
இதையும் படிங்க:பணமோசடி வழக்கு: முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சருக்கு சம்மன்!