உத்தரபிரதேசம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு வயநாடு சென்றிருந்தார். அங்கு காங்கிரஸ் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து அவர் கூறிய கருத்தை, தனியார் செய்தி தொலைக்காட்சி தொகுப்பாளர் ரோகித் ரஞ்சன், உதய்ப்பூர் கன்ஹையா கொலை வழக்குடன் ஒப்பிட்டு திரித்து கூறியதாக தெரிகிறது. இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்ததையடுத்து, தனியார் செய்தி நிறுவனம் மன்னிப்பு கோரியது.
இதுதொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ தேவேந்திர யாதவ் அளித்த புகாரின் அடிப்படையில், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாகவும், இருவேறு பிரிவினரிடையே வெறுப்பை பரப்பியதாகவும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தொகுப்பாளர் ரஞ்சன் மற்றும் தனியார் செய்தி நிறுவனம் மீது ராய்ப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து ரஞ்சனை கைது செய்வதற்காக ராய்ப்பூர் போலீசார் உத்தரபிரதேசம் சென்றனர். இதையறிந்த ரஞ்சன் ட்விட்டரில் மூலம் தனது சொந்த மாநிலமான உத்தரபிரதேச போலீசாரிடம் உதவி கோரினார். இதனால் ராய்ப்பூர் போலீசார் ரஞ்சனை கைது செய்யவிடாமல் உத்தரபிரதேச போலீசார் தடுத்தனர்.
இதனால் ரஞ்சன் வீட்டு வாசலில், இருமாநில போலீசாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், உத்தரப் பிரதேச போலீசார் ரோகித் ரஞ்சனை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அழைத்துச் சென்றுவிட்டனர். ரஞ்சனை கைது செய்ய வாரண்ட் இருப்பதால் அவரை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என ராய்ப்பூர் போலீசார் ட்விட்டரிலும் பதிவிட்டனர்.