டெல்லி: நாட்டில் டெல்லி, இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்டப் பல்வேறு மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.
இமாச்சலப்பிரதேசத்தில் மிக கனமழை: இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மணாலி, குலு, கின்னவுர், சம்பா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்தன, விவசாயப் பயிர்கள் நீரில் முழ்கின. வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் புகழ்பெற்ற சிம்லா - கல்கா ரயில் பாதையில் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 736 சாலைகளில் போக்குவரத்துக்கு முடங்கியுள்ளது.
ராவி, பியாஸ், சட்லஜ், செனாப் உள்ளிட்ட அனைத்து முக்கிய ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், ஆற்றங்கரைகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்தது. 7 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சம்பா, காங்க்ரா, குலு ஆகியப் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன முதல் மிக கனமழை பெய்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களில் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு பேய் மழை: டெல்லியில் நேற்று முதல் இன்று(ஜூலை 9) காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 153 மில்லி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. இது 1982ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜூலை மாதத்தில் ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழைப்பதிவு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 1982ஆம் ஆண்டுக்கு ஜூலை 25ஆம் தேதி 24 மணி நேரத்தில் 169.9 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 41 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் அதி கனமழை பெய்துள்ளது.
இந்த கனமழையால் டெல்லியில் குடியிருப்புகள், மருத்துவமனை, பூங்காக்கள், சாலைகள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையில் தேங்கியிருக்கும் முழங்கால் அளவு மழை நீரில் ஊர்ந்தபடி செல்கின்றனர். கனமழை காரணமாக பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கனமழையால், டெல்லி அரசு, இன்று அரசு ஊழியர்களின் விடுமுறையை ரத்து செய்தது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் மக்கள் களப்பணியில் ஈடுபட்டு மக்களுக்கு உதவ வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவுறுத்தினார்.
உத்தரகாண்டில் கனமழை, 3 பேர் பலி:
உத்தரகாண்ட் மாநிலத்திலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் ஆறுகள் நிரம்பி வழிகின்றன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இன்று தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் நிலச்சரிவு காரணமாக சாலையில் சென்று கொண்டிருந்த கார் நிலை தடுமாறி கங்கை நதியில் விழுந்தது. இதில், காரில் இருந்த மூன்று பேர் உயிரிழந்தனர். 5 பேர் மீட்கப்பட்டு ரிஷிகேஷில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மூன்று பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
கனமழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிவதாலும், நிலச்சரிவுகள் ஏற்படுவதாலும், பொதுமக்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும், விழிப்புடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி வலியுறுத்தியுள்ளார்.
கூடுதலாக மழைப்பொழிவு:
ஜூலை மாதத்தில் 8ஆம் தேதி வரை இந்தியாவில் பல பகுதிகளில் கனமழை பெய்ததாகவும், இதனால் நாட்டின் மழை பற்றாக்குறை குறைந்துள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் மழைப்பொழிவு இயல்பை விட 2 சதவீதம் அதிகரித்துள்ளது. பருவமழையை நம்பியுள்ள மத்திய இந்திய மாநிலங்களில் இயல்பை விட 4 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. தென் மாநிலங்களில் மழை பற்றாக்குறை 45 சதவீதத்திலிருந்து 23 சதவீதமாக குறைந்துள்ளது.
ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர்:
ராஜஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீரில் பரவலாக மழை பெய்தது. ராஜஸ்தானின் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்தது. இதில், நீரில் மூழ்கியது, மின்னல் தாக்கியது உள்ளிட்ட சம்பவங்களில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்தனர். இதேபோல், ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று மாலை கனமழை வெள்ளத்தில் சிக்கிய இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
கனமழை எச்சரிக்கை:
டெல்லி, ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீரில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் நாளை முதல் வரும் 13ஆம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Jammu: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு இராணுவ வீரர்கள் பலி