நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துவருகிறது. இந்நிலையில், ரயில் நிலையங்களில் மக்கள் கூடுவதைக் குறைக்க நடைமேடை கட்டணத்தை ரயில்வே துறை 10 ரூபாயிலிருந்து 30 ரூபாயாக உயர்த்தியுள்ளது. பல ரயில் நிலையங்களில் கட்டணமானது மூன்றிலிருந்து ஐந்து மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள முக்கியமான ரயில் நிலையங்களில், நடைமேடை கட்டணம் தற்போது 50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதும் ஒழுங்குப்படுத்துவதும் மண்டல ரயில்வே மேலாளரின் பொறுப்பாகும்.
பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அவர்களின் நடமாட்டத்தைக் குறைக்க இது ஒரு தற்காலிகமான நடவடிக்கையாகும்.
மக்கள் அதிகளவில் ரயில்வே நிலையங்களுக்கு வருவதைத் தடுப்பதற்காக களத்தில் ஆய்வு மேற்கொண்ட பிறகு கட்டணம் உயர்த்தப்பட்டது. கட்டணத்தை உயர்த்துவதற்கான அதிகாரம் மண்டல ரயில்வே மேலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.