மும்பை: மகாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள பல்லார்ஷா ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமேம்பாலம் பழுதடைந்து இருந்தும் ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருந்துவந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று (நவம்பர் 27) புனே செல்லும் ரயிலில் ஏறுவதற்காக ஏராளமான பயணிகள் அந்த நடைமேம்பாலம் வழியாக சென்றுள்ளனர். அப்போது பாலத்தின் ஒருபகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதனால் 13 பயணிகள் 20 அடி உயரத்திலிருந்து தண்டவாளத்தில் விழுந்தனர்.
அதில் 12 பேருக்கு காயங்களும், ஒருவருக்கு தலையில் படுகாயமும் ஏற்பட்டது. சில பயணிகள் சிராய்ப்புகளுடன் தப்பினர். அதன்பின் ரயில்வே போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். இதுகுறித்து மத்திய ரயில்வே தரப்பில், பல்லார்ஷா ரயில் நிலையத்தின் பிளாட்பார்ம் எண் 1 மற்றும் 2 இன் இடையே கட்டப்பட்டிருந்த நடைமேம்பாலத்தின் ஒரு பகுதி மாலை 5.10 மணியளவில் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் தலையில் அடிபட்டவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நடைமேம்பாலத்தின் பராமரிப்பு, தரம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனிடையே பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஹரியானா: விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு