இன்று (நவ.13) பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய எல்லைக்குள் தாக்குதல் நடத்திய நிலையில், உரி, குரேஸ் பிரிவுகளில் பாதுகாப்புப் படையின் உதவி ஆய்வாளர் உள்பட மூன்று பேரும், பொது மக்கள் ஆறு பேரும் கொல்லப்பட்டனர். மேலும் பாதுகாப்புப் படையினர் நான்கு பேரும், பொது மக்கள் எட்டு பேரும் படுகாயமடைந்துள்ளனர்.
இதற்கு பதிலடி தரும் விதமாக இந்தியா நடத்திய தாக்குதலில் ஏழு முதல் எட்டு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 12 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்களின் பதுங்குக் குழி, எரிபொருள் நிரப்பும் இடங்கள் அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள், நாட்டைப் பாதுகாப்பதிலும் பாகிஸ்தானின் திட்டங்களை முறியடிப்பதிலும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக ராகுல் காந்தி பாராட்டியுள்ளார்.
இது குறித்து இந்தி மொழியில் ட்வீட் செய்துள்ள அவர், "பாகிஸ்தான் போர்நிறுத்த மீறலில் ஈடுபடும்போதெல்லாம், அந்நாட்டின் அச்சங்களும் பலவீனங்களும் இன்னும் தெளிவாகத் தெரிகின்றன. திருவிழா காலத்தின்போதும்கூட இந்திய ராணுவ வீரர்கள் அவர்களது குடும்பங்களைத் தவிர்த்து, நம் நாட்டைப் பாதுகாத்து, பாகிஸ்தானின் அருவருப்பான திட்டங்களை தோற்கடித்து வருகிறார்கள். ராணுவத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் எனது வணக்கங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.