கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 3) அன்று வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிராக லக்கிம்பூரில் உழவர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அம்மாநிலத் துணை முதலமைச்சர் அங்கு வரும்போது அவருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெடிக்கும் வன்முறை
மேலும், ஒன்றிய உள் துறை இணையமைச்சரின் மகன் காரில் அவ்வழியே சென்றார். அப்போது, பாஜகவுக்கு எதிராகப் போராட்டக்காரர்கள் கோஷமிட, அமைச்சரின் மகனுடன் வந்த பாஜகவினர் உழவர் மீது காரை செலுத்தினர். இதையடுத்து, அவர்களின் கார் போராட்டக்காரர்களால் கொளுத்தப்பட்டது. இந்த வன்முறைச் சம்பவத்தில் நான்கு உழவர், பாஜகவைச் சேர்ந்தவர்கள் என எட்டு பேர் உயிரிழந்தனர்.
வன்முறையில் பாதிக்கப்பட்ட உழவரின் குடும்பத்தைக் காணச் சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, கெரி மாவட்டம் லக்கிம்பூர் பகுதியில் காவல் துறையினரால் தடுக்கப்பட்டார். பின்னர் லக்னோவிலிருந்து 90 கி.மி. தூரத்திலுள்ள சீதாபூரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
ஆபத்தில் அரசியலமைப்பு
இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பபக்கத்தில் பதிவு ஒன்றை இட்டிருந்தார். அதில், “ஒரு அமைச்சரின் மகன் தனது காரை, உழவர் மீது ஏற்றி கொலைசெய்தால் அதனைக் காவல் துறையும், அரசும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன. கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களைச் சந்திக்க அனுமதி மறுக்கப்படுகிறது.
மேலும் வன்முறையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைப் பார்க்கச் சென்ற பெண் தலைவரை (பிரியங்கா காந்தி) முறையான முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) இல்லாமல் 30 மணி நேரம் காவலில் வைத்திருந்தனர். இவை அனைத்தும் நாட்டின் அரசியலமைப்பு ஆபத்தில் இருப்பதை உணர்த்துகிறது” எனப் பதிவிட்டிருந்தார்.