டெல்லி : கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம், கோலாரில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டார்.
“நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைவருக்கும் எப்படி ஒரே பெயராக இருக்க முடியும்? எப்படி அனைத்து திருடர்களும் மோடி என்ற இணை பெயரோடு இருக்க முடியும்?” என ராகுல் காந்தி பேசினார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குஜராத் பாஜக சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் கடந்த மார்ச் 23ஆம் தேதி சூரத் நீதிமன்றம் ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்தது. மேலும் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. மேலும் ராகுல் காந்திக்கு 30 நாட்கள் ஜாமீன் வழங்கப்பட்டது. நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கொள் காட்டியும், இந்திய பிரதிநிதித்துவச் சட்டத்தை குறியிட்டுக் காட்டியும் ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவைச் செயலகம் உத்தரவிட்டது.
மேலும் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சி சார்பில் "சங்கல்ப் சத்தியாகிரக" போராட்டம் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மூத்த தலைவர்கள் ப. சிதம்பரம் உள்ளிட்டோர் பாஜகவுக்கு எதிராக சங்கல்ப் சத்தியாகிரக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர் அமளியில் ஈடுபட்டனர். மேலும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான கருத்துகளை அமெரிக்கா மற்றும் ஜெர்மனி வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்து இருந்தனர்.
இதனிடையே எம்.பி.க்களுக்கான அரசு குடியிருப்பை விட்டு வெளியேறுமாறு மக்களவைச் செயலகம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது. அரசு குடியிருப்பை காலி செய்வதாகக் கூறி ராகுல் காந்தி மக்களவைச் செயலகத்திற்கு பதில் கடிதம் அனுப்பினார். ராகுல் காந்தியின் ஜாமீன் காலம் நெருங்கி வரும் நிலையில், அவர் எப்போது தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு எதிரான அவதூறு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி இன்று (ஏப்.3) மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. குஜராத் மாநிலம், சூரத் செல்லும் ராகுல் காந்தி அங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : உலகளவில் பிரபலமாகும் சேலம் ஜவ்வரிசி... மத்திய அரசு அளித்த அங்கீகாரம்!