பாட்னா: பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுஷில் குமார் மோடி, கடந்த 2019ஆம் ஆண்டு, ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கும், குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கும் ஒன்றுதான். காரணம், மோடி குடும்பப் பெயர் குறித்து அவதூறாகப் பேசியதாக ராகுல் காந்தி மீது சுஷில் குமார் மோடியும் வழக்கு தொடர்ந்து இருந்தார். இதனிடையே சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், உடனடியாக அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக நேற்று (மார்ச் 24) மக்களவைச் செயலாளர் அறிவித்தார். இதற்கு நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகள், தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து பேசிய சுஷில் குமார் மோடி, "காங்கிரஸ் தலைவர்கள் எதிர்க்கும் அளவிற்கு, ராகுல் காந்திக்கு உண்மையைப் பேசியதற்காக தண்டனை விதிக்கப்படவில்லை. ஆனால், மோடி குடும்பப் பெயரை வைத்து லட்சக்கணக்கான பிற்படுத்தப்பட்ட மக்களை ராகுல் காந்தி அவமதித்துள்ளார். தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு காங்கிரஸ் கட்சினர் இவிஎம் இயந்திரத்தை குறை கூறுகிறார்கள். தங்களுக்கு பாதகமான தீர்ப்புகள் வரும்போது நீதித்துறை, அரசு மற்றும் ஊடகங்களை சுட்டிக் காட்டுகிறார்கள்.
ராகுல் காந்தி நீதிமன்ற முடிவை ஏற்றுக் கொண்டு, நீதித்துறைக்கு மரியாதை அளிக்க வேண்டும். ராகுல் காந்திக்கு முன்னதாகவே ஜெயலலிதா மற்றும் லாலு யாதவ் உள்ளிட்ட 200 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எனவே ராகுல் காந்தி மீதான வழக்கு என்பது புதிது அல்ல. உண்மைக்காக நிற்பவர்கள் தாக்கப்படுகிறார்கள்.
அதேநேரம் காங்கிரஸ், உண்மையை வதைத்து அரசியல் செய்கிறது. ஜனநாயக இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மக்களை திருடர்கள் என அழைப்பதா? பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உயர் பதவிகளுக்குச் செல்லும் உரிமையை அரசியல் சாசனம் வழங்கவில்லையா?ராகுல் காந்தி அவரது செயலுக்காக தண்டிக்கப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நரேந்திர மோடி பிரதமராக ஆனதை ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
இதுதான் அவரது (பிரதமர் மோடி) வகுப்பினரைச் சேர்ந்த அனைவரையும் திருடர்கள் என கூறி அவமானப்படுத்தியதற்கு காரணம் ஆகும். நாட்டில் சட்டத்தின் முன் அனைவரும் சமமே. நாட்டில் சர்வாதிகாரம் வந்து விட்டதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். யார் ஊழலில் திளைத்தார்களோ, அவர்களே ஊழலுக்கு எதிராக மோதுகிறார்கள். காங்கிரஸ் நீதிமன்றத்தின் முடிவை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை" என கூறியுள்ளார்.
இந்த நிலையில் வருகிற ஏப்ரல் 12ஆம் தேதி அன்று ராகுல் காந்தி பாட்னா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இறுதியாக பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு நடந்த போது, ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மகாத்மா காந்தி ஒரு பட்டம் கூட பெறவில்லை.. ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர்..