டெல்லி: நாடாளுமன்றத்தின் மக்களவையில் ராகுல் காந்தி இன்று விவசாயிகளுக்கு ஆதரவாக, வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேசினார். அவரது பேச்சின் முழு கவனமும் விவசாய சட்டங்களை மையப்படுத்தியே இருந்தது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக அமைந்துள்ளதை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, இந்தச் சட்டத்தால் நாம் இருவர், நமக்கு இருவர் என ஆக மொத்தம் நான்கு பேர் மட்டுமே பயன்பெறுவார்கள்; இவர்களே நாட்டை வழிநடத்துகிறார்கள் என்றார்.
அதாவது அவர் இந்திய பெருநிறுவன முதலாளிகளான அம்பானி மற்றும் அதானியின் பெயரை குறிப்பிடாமல் கூறினார். மேலும் டெல்லியில் நடந்த போராட்டம் விவசாயிகள் போராட்டம் அல்ல, அது நாட்டு மக்களின் எழுச்சி இயக்கம் என்றும் வர்ணித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் விவசாயிகள் எங்கும் செல்ல மாட்டார்கள், இந்த அரசாங்கத்தை கவிழ்பார்கள் என்று கூறி, டெல்லி விவசாய தொடர் போராட்டத்தில் கலந்துகொண்டு உயிரிழந்த 200 விவசாயிகளுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினார்.
அப்போது, திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களும் ராகுல் காந்தியுடன் இணைந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.
இதையும் படிங்க: விவசாயிகளின் போராட்டம் அல்ல.. நாட்டு மக்களின் எழுச்சி இயக்கம்- ராகுல் காந்தி