திருவனந்தபுரம்: காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி திட்டமிடப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று இரவு கோழிக்கோடு விமான நிலையம் வந்தடைந்தார். அவரை, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், எம்எல்ஏ அனில்குமார், மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.வி. பிரகாஷ் ஆகியோர் வரவேற்றனர்.
இதையடுத்து எம்பி ராகுல் காந்தி, கேரள எதிர்கட்சித் தலைவரான ரமேஷ் சென்னிதலா தலைமையில் நடைபெறும் பாத யாத்திரை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் இன்றும் நாளையும் கலந்துகொள்கிறார்.
தொடர்ந்து இவர், வாணியம்பலம் ரயில்வே நடைமேடையைத் திறந்துவைக்கிறார், செருகோடு மகளிர் கூட்டுறவுச் சங்கத்தின் வெள்ளி விழா கொண்டாட்டங்களைத் தொடங்கிவைக்கிறார், நீலம்பூரில் பழங்குடியின நலச் சங்கத்தினைத் தொடங்கிவைத்தார்.
பின்னர், ராகுல் காந்தி மதியம் 1.40 மணிக்கு சிறப்பு விமானத்தில் திருவனந்தபுரத்திற்கு விரைந்து ரமேஷ் சென்னிதலா தலைமையிலான ஐஸ்வர்ய கேரள யாத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.
முன்னதாக, கேரளாவின் காசர்கோடு பகுதியில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கேரள மாநில பாஜக தலைவர் கே. சுரேந்திரன் முன்னிலையில் கட்சியின் விஜய யாத்திரையை கொடியேற்றி தொடங்கிவைக்கிறார்.
இதில், மத்திய மாவட்ட ஜெனரல் வி.கே. சிங், மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
மார்ச் 7ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறும் பேரணியின் நிறைவுக் கூட்டத்தில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொள்வார் எனத் தெரிகிறது.