டெல்லி: மணிப்பூரில் வாழும் பெரும்பான்மை சமூகமான மெய்தீஸ் (Meiteis) சமூகத்தினர், தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், மெய்தீஸ் சமூகத்தினரை பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதற்கு, குக்கி, நாகா, சோமி உள்ளிட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், பெரும்பான்மை மக்களான மெய்தீஸ் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக பாஜக அரசு, அவர்களது கோரிக்கையை நிறைவேற்றித் தர முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே 3ஆம் தேதி, மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர்கள் அமைப்பு சார்பில் பேரணி நடத்தப்பட்டது.
இந்த பேரணிக்கு எதிராக மெய்டீஸ் உள்ளிட்ட பெரும்பான்மை சமூகத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல இடங்களில் கலவரம் வெடித்தது. வீடுகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. காவல் துறை மற்றும் ராணுவத்தினர் மணிப்பூரில் குவிக்கப்பட்டு கலவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், மே 3ஆம் தேதி தொடங்கிய வன்முறை தற்போது வரை ஓயவில்லை. சுமார் இரண்டு மாதங்களாக மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். கலவரம் நடந்த பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாமல் மாநில அரசு திணறி வருகிறது. மணிப்பூர் கலவரத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பிரேன் சிங் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும், மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடி தொடர்ந்து மெளனம் காப்பதாக எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
அது மட்டுமல்லாமல், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பயணம் செல்ல முடிந்த பிரதமர் மோடியால், வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு ஏன் செல்ல முடியவில்லை என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி இரண்டு நாட்கள் பயணமாக இன்று (ஜூன் 29) மணிப்பூர் சென்றுள்ளார்.
ராகுல்காந்தி இன்று காலை டெல்லி விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் மணிப்பூருக்கு புறப்பட்டுச் சென்றார். நாளை வரையிலான இந்த பயணத்தில் ராகுல்காந்தி, பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள நிவாரண முகாம்களை பார்வையிட உள்ளார். மேலும், இம்பால் மற்றும் சுராசந்த்பூரில் மக்கள் பிரதிநிதிகளையும் சந்தித்து பேச உள்ளார்.
இதையும் படிங்க: ஒரே நாடு ஒரே மதம் என சொல்லும் மோடி ஒரே சாதி என கூறுவாரா? - கே.எஸ்.அழகிரி காட்டம்