டெல்லி: கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடாகவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டார் எனக் கூறி, குஜராத் எம்.எல்.ஏ. சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
மேலும் இந்த வழக்கில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய அனுமதித்த நீதிமன்றம் அதுவரை தீர்ப்பை நிறுத்தி வைப்பதாக தெரிவித்தது. இதையடுத்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக நாடாளுமன்ற மக்களவை செயலகம் அறிவித்தது. மக்களவை செயலகம் வெளியிட்ட அறிவிப்பில், "அரசியலமைப்புச் சட்டத்தின் 102(1)(e) விதிகளின் படி, தண்டனை விதிக்கப்பட்ட தேதியிலிருந்து அதாவது 23 மார்ச், 2023 முதல் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து ராகுல் காந்தி தன் ட்விட்டரில் கருத்து தெரிவித்தார். அதில் "இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன். அதற்காக எந்த விலையையும் தர தயாராக உள்ளேன்" என்று பதிவிட்டார். இந்நிலையில், தகுதி நீக்கத்திற்கு பின் முதல்முறையாக ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.
இன்று மதியம் 1 மணி அளவில் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்திக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அவர் வெற்றி பெற்ற கேரள மாநிலம் வயநாடு காலியானது. விரைவில் அந்த தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மோடி கருத்து விவகாரம் - பாட்னா நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு விசாரணை - ராகுலை துரத்தும் வழக்குகள்?