டெல்லி: மோடியின் பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது சூரத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி வர்மா உத்தரவிட்டார். அதோடு இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி அளித்து 30 நாட்களுக்கு ஜாமீன் வழங்கினார். இதனை மேற்கோள்காட்டி ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. இந்த சம்பவம் நேற்று நடந்து முடிந்த நிலையில் இன்று (மார்ச் 25) ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், "இந்திய மக்களின் ஜனநாயகத்துக்காக போராடிக் கொண்டிருக்கிறேன். தகுதி நீக்கம் செய்துவிட்டாலும் எனது குரலை ஒடுக்க முடியாது. நான் சாவர்க்கர் அல்ல, காந்தி, காந்தி ஒருபோதும் மன்னிப்பு கேட்டதில்லை. நாடாளுமன்றத்தில் அதானி - மோடி நட்பு குறித்து கேள்வி எழுப்பினேன். ஆனால், எனது உரை நீக்கப்பட்டுவிட்டது. இதுகுறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவேன் என ஆவேசமாக பேசினார். இந்த செய்தியாளர்கள் சந்திப்புக்கு பின், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் ராகுல் காந்தி. அதில் கமல் ஹாசனின் விக்ரம் பட பாடல் இடம்பெற்றுள்ளது. இதனை காங்கிரஸ் கட்சியினர் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: "சிறையோ,தகுதி நீக்கமோ" அச்சமில்லை எனக்கு - ராகுல்காந்தி பேச்சு