வயநாடு : எம்.பி பதவி நீக்கத்திற்கு பின் முதல் முறையாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பொது வெளியில் தோன்றினார். பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என சூரத் நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கொள்காட்டி மக்களவை செயலகம் ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. மேலும் அவர் தங்கி இருந்த அரசு வீட்டை காலி செய்யுமாறு மக்களவை செயலகம் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியது. இந்த மாத இறுதிக்குள் வீட்டை காலி செய்வதாக ஒப்புக் கொண்டு ராகுல் காந்தி பதில் கடிதம் எழுதினார்.
எம்.பி பதவி தகுதி நீக்கத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி அதன் பின் முதல் முறையாக இன்று பொது வெளியில் தோன்றினார். 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு ராகுல் காந்தி சென்றார். திறந்தவெளி வாகனத்தில் வந்த ராகுல் காந்திக்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
ஊர்வலத்தை தொடர்ந்து கல்பற்றா பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் மக்கள் முன்னிலையில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர், எம்.பி. பதவி, வீடு என பாஜக தன்னிடம் இருந்து எல்லாவற்றையும் பறித்துக் கொண்டாலும் பிரச்சினை இல்லை என்றும், சிறையில் அடைத்தாலும் வயநாடு மக்களின் பிரதிநிதியாக வலம் வருவதை தடுக்க முடியாது என்று தெரிவித்தார்.
நமது நாட்டின் வெளியுறவுக் கொள்கை தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர்களே நாடாளுமன்றத்தை முடக்கி தன்னை பேச விடாமல் தடுத்ததாக ராகுல் காந்தி தெரிவித்தார். எம்.பி. பதவி நீக்கம் மக்களிடையேயான உறவை மிக ஆழப்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
மக்களிடையேயான தனது உறவு குடும்பம் போன்றது என்றும் ஒரு மகனுக்கான உறவு அல்லது சகோதரருக்கான உறவு போன்றது என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். வீட்டுக்கு போலீசாரை அனுப்புவதன் மூலம் என்னை பயமுறுத்த முடியாது என்றும் தன்னுடைய வீட்டை அபகரிப்பதன் மூலம் நிம்மதியை கெடுக்க முடியாது என்றும் கூறினார்.
பாஜக மக்களவை பிளவுபடுத்துவதுடன் மக்கள் மத்தியில் மோதலை உண்டாக்குவதாக ராகுல் காந்தி தெரிவித்தார். பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தியின் சகோதரியும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி, கேரளா காங்கிரஸ் நிர்வாகிகள் மூத்த தலைவர்கள், கட்சி உறுப்பினர்கள் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : பசு கோமியத்தால் மனிதர்களுக்கு ஆபத்தா? அதிர்ச்சி தரும் தகவல்கள்!