டெல்லி: மக்களவையில், எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான இரண்டாவது நாள் இன்று (ஆகஸ்ட். 9) நடைபெற்றது. பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ராகுல் காந்தி நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் உரையாற்றினார். பிரதமர் மோடி குறித்தும் பாஜக ஆட்சி குறித்தும் கடும் விமர்சனங்களை முன் வைத்த ராகுல்காந்தி மீது பாஜக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர் பறக்கும் முத்தம் கொடுத்ததாக (flying kiss) சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளனர்.
நாடு முழுவதும் மக்களவையில் ராகுல் காந்தியின் விவாதம் அதற்கான பாஜகவின் பதிலை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் பறக்கும் முத்தம் (flying kiss) தொடர்பான விவகாரம் ட்விட்டரில் ட்ரெண்டாகி உள்ளது. இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் மக்கள் பல்வேறு விவாதங்களை முன்வைத்துள்ள நிலையில் சிலர் அதற்கான ஆதாரங்களை குறித்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
குறிப்பாக பாஜக ராகுல் காந்தியின் பேச்சு மக்கள் மத்தியில் சென்று சேரக்கூடாது என்ற எண்ணத்தோடு முன்கூட்டியே திட்டமிட்டு இதுபோன்ற ஒரு விமர்சனத்தை ராகுல்காந்தி மீது முன் வைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமா மாலினியிடம் நாடாளுமன்றத்திற்கு வெளியே வைத்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்று ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்ததை நீங்கள் பார்த்தீர்களா? என்று கேள்வி எழுப்பியது. இதற்கு அவர், ராகுல் காந்தி அப்படி செய்ததை தான் பார்க்கவில்லை எனக் கூறியுள்ளார்.
மேலும், மக்களவையில் ராகுல் காந்தி பேசிக்கொண்டு இருக்கும்போது, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது இருக்கையில் அமரும் வீடியோவை சூம் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இணையவாசிகள், ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்ததற்கான எந்த காட்சியும் அதில் காணவில்லையே என்ற வகையில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
மேலும், பலர் ராகுல் காந்தியின் உரை நாட்டு மக்களுக்கு சென்று சேரக்கூடாது என்ற வகையில் பாஜக இந்த திட்டத்தை மேற்கொண்டிருந்தால், அதன் பின்விளைவுகளை கட்டாயம் சந்திக்கும் எனவும் பலர் தங்கள் கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
முன்னதாக மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி தலைமையிலான அரசு இந்தியாவை கொன்றுவிட்டதாக குற்றம் சாட்டினார். மேலும், பாஜக அரசாங்கம் பாரத மாதவின் காவலர்கள் அல்ல அவரை கொலை செய்த குற்றவாளிகள் எனவும் கடுமையாக தாக்கினார்.
மணிப்பூர் விவகாரம், விவசாயிகள் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ராகுல் காந்தி காரசாரமான விவாதங்களையும், கேள்விகளையும் முன்வைத்த நிலையில் இது இந்திய மக்களின் கேள்வியாகவே மக்களவையில் எதிரொலிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், இந்திய மக்களை குரல் அற்றவர்களாக பாஜக அரசாங்கம் மாற்ற முயற்சிக்கிறது எனவும் ராகுல் காந்தி விமர்சித்தார். நீண்ட நாள்கள் களித்து அண்மையில் மக்களவைக்கு வருகை தந்த ராகுல் காந்தியின் உரையை அரசியல் தலைவர்கள், காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் மக்களவை உரையை முடித்த கையோடு ராகுல் காந்தி Flying kiss கொடுத்ததாக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:"பாரத மாதாவின் பாதுகாவலர்கள் அல்ல.. அவரை கொன்றவர்கள்.." மக்களவையில் ராகுல் காந்தி காட்டம்!