டெல்லி: மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இனக்கலவரம் நடந்து வருகிறது. ஆனால் மணிப்பூர் சம்பவம் குறித்து பிரதமர் மோடி மெளனமாகவே இருந்து வந்தார். பின்னர் மணிப்பூர் கலவரத்தின்போது இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியே வந்தபிறகு, நாடாளுமன்றத்திற்கு வெளியே அது தொடர்பாக ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசினார்.
இதனால், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்குள் பேச வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது முதலே பிரதமர் மணிப்பூர் சம்பவம் குறித்து பேச வேண்டும் எனக் கோரி இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். பின்னர், மணிப்பூர் இனக்கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வலியுறுத்தி, எதிர்கட்சி எம்பிக்கள் கடந்த ஜூலை 26ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். இதனை மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா ஏற்றுக் கொண்டார்.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது கடந்த 8ஆம் தேதி முதல் மக்களவையில் விவாதம் நடைபெற்றது. கடந்த 9ஆம் தேதி, காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து உரையாற்றினார். மணிப்பூரில் இந்தியாவையும், பாரத மாதாவையும் பாஜக அரசு கொன்றுவிட்டதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.
இதைத் தொடர்ந்து நேற்று(ஆகஸ்ட் 10) பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு பதிலளித்து பேசினார். அப்போது, நாட்டின் எதிர்காலத்தின் மீது எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை கிடையாது என்றும், அவர்களுக்கு சொந்த கட்சியின் வளர்ச்சி மீதே விருப்பம் என்றும் தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் தன்னை மோசமாக பேசியதால் தான் தொடர்ந்து வளர்ச்சியடைந்ததாகவும், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நல்ல சகுனமாக கருதுவதாகவும் தெரிவித்தார். சுமார் இரண்டு மணி நேரம் பேசிய பிரதமர் மோடி மணிப்பூர் பற்றி பேசவில்லை எனக்கூறி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதையடுத்து, தீர்மானம் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்தது.
இந்த நிலையில், டெல்லியில் இன்று(ஆகஸ்ட் 11) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ராகுல்காந்தி, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான பிரதமர் மோடியின் பதிலுரை குறித்து கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய அவர், "மணிப்பூர் பல மாதங்களாக பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது, நாடாளுமன்றத்தில் சிரிப்பதும், கேலி செய்வதும் பிரதமர் பதவிக்கு அழகல்ல. பிரதமர் மோடி தனது இரண்டு மணி நேர நீண்ட உரையில், மணிப்பூருக்காக இரண்டு நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கினார்.
பிரதமர் நேற்று மக்களவையில் இரண்டு மணிநேரம் சிரித்து, நகைச்சுவையாகவும் முழக்கமிட்டபடியும் பேசியதை நான் பார்த்தேன். அப்போது, மணிப்பூர் கலவரத்தை பிரதமர் மறந்துவிட்டார் என நினைக்கிறேன். அவையின் நடுவில் அமர்ந்துகொண்டு பிரதமர் சிறிதும் வெட்கமின்றி சிரித்துக் கொண்டிருந்தார். இங்கு பிரச்சினை காங்கிரஸ் கட்சியோ, நானோ அல்ல, மணிப்பூர்தான். மணிப்பூர் என்ன நடக்கிறது? அங்கு கலவரம் ஏன் தடுத்து நிறுத்தப்படவில்லை? என்பதே பிரச்சினை. மணிப்பூரில் பாரத மாதாவை கொன்றுவிட்டார்கள் என்று நான் கூறியது வெற்று வார்த்தைகள் அல்ல. மணிப்பூர் எரிய வேண்டும், அங்கு கலவரம் தொடர்ந்து நடக்க வேண்டும் என்றே பிரதமர் மோடி விரும்புகிறார். ராணுவத்தால் 2 முதல் 3 நாட்களில் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட முடியும், ஆனால் அரசு அதை விரும்பவில்லை" என்று கூறினார்.