டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் பேச்சால் தண்டனை பெற்றுள்ள ராகுல் காந்தி, மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதன் பின்னர் முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்து வரும் ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் தான் எழுப்பிய எந்த கேள்விகளுக்கும் பதில் கிடைக்கவில்லை என்றார்.
அதானிக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நெருங்கிய நட்பு இருப்பதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி இது குறித்த தனது கேள்விகளை அரசு விரும்பவில்லை என கூறினார். நாடாளுமன்றத்தில் எனது அடுத்த பேச்சு இடம் பெறக் கூடாது என பிரதமர் முடிவு செய்து விட்டார் என கூறிய ராகுல் நாடாளுமன்றத்தில் அச்சத்தை பிரதமரின் கண்ணில் பார்த்தேன். அதனால் தான் திசை திருப்பும் முயற்சியாக என்னை தகுதி நீக்கம் செய்துள்ளனர் என சாடினார்.
20 ஆயிரம் கோடி ரூபாய் அதானியின் ஷெல் நிறுவனங்களுக்கு எங்கிருந்து வந்தது என்ற எனது கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என ராகுல் கூறினார். அதானியை பிரதமர் ஏன் ஆதரிக்கிறார் என்ற கேள்வி மக்களின் மனதில் தானாகவே எழுந்துள்ளது. அதானியின் வெற்றி, நாட்டின் வெற்றி என பாஜகவினர் கூறுகின்றனர். ஆனால் அதானி தான் தேசம் என்ற கருத்துரு பாஜகவினர் மத்தியில் உருவாகியுள்ளது என ராகுல் கூறினார்.
அதானியின் 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் சீன நபர்களின் தொடர்பு உள்ளது, நரேந்திர மோடிக்கும் அதானிக்கும் என்ன உறவு என கேள்விகளை ராகுல் அடுக்கினார். அதானி மற்றும் ஸ்டேட் வங்கி தலைவருடன் ஆஸ்திரேலியாவில் இருந்த புகைப்படத்தை நாடாளுமன்றத்தில் நான் வெளியிட்டேன் என கூறிய ராகுல், இது தொடர்பான தனது பேச்சு குறித்து விரிவான விளக்கத்துடன் மக்களவைத் தலைவருக்கு தான் கடிதம் ஒன்றையும் எழுதியதாக குறிப்பிட்டார்.
இந்த குற்றச்சாட்டுக்களை தான் புதிதாக கண்டுபிடிக்கவில்லை என்றும், ஏற்கெனவே செய்தியாக பதிவானதையதையே குறிப்பிட்டதாகவும், ஆனால் அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் பொய் கூறினர் என ராகுல் குற்றம் சாட்டினார்.
வெளிநாட்டு உதவியை தான் கேட்டதாக தன் மீது குற்றம் சாட்டப்படுவதாக விளக்கிய ராகுல், இது குறித்து விளக்கம் அளிக்க நாடாளுமன்றத்தில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறினார். இந்தியாவின் பிரச்சனையை இந்தியாதான் தீர்க்க வேண்டும் என தான் பேசியது மறைக்கப்பட்டுள்ளதாகவும் ராகுல் பேசினார்.
2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி சார்ந்துள்ள மோடி சமூகத்தை விமர்சிக்கும் விதமாக பேசியதாக ராகுல் மீது குற்றம் சாட்டப்பட்டது. மோடி என பெயருடைய அனைவருமே திருடர்களாக இருக்கின்றனர் என நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோரை குறிப்பிட்டு ராகுல் பேசினார்.
இது தொடர்பாக குஜராத் எம்எல்ஏ தொடர்ந்த வழக்கில் ராகுலுக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போதும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ராகுல் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">