புதுச்சேரி: ஆளுநரின் ஆலோசகர்களுக்கு இரண்டு மாதச் செலவு மட்டும் ரூ.24 லட்சம் ஆவதால், அதிகப்படியாக உள்ள ஐஏஎஸ் அலுவலர்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று ராஜிவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு கோரிக்கைவைத்துள்ளது.
இது குறித்துத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் பெற்ற ராஜிவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதி கூறும்போது, "ஆளுநர்களுக்கு ஆலோசகர்களாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற இரு ஐஏஎஸ் அலுவலர்களுக்கும் மாத ஊதியமாக மொத்தம் ரூ.2.8 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
![ragubathy about pondicherry government over expenses](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12086134_548_12086134_1623405235509.png)
இவர்களுக்கு உதவியாளர்களாக வேறு அரசுத் துறையில் இருந்த நான்கு ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். அத்துடன் ஆளுநர் ஆலோசகர்கள் தங்க, அரசு இல்லம் ரூ.14.65 லட்சத்தில் செலவுசெய்து சரிசெய்து தரப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, இந்த இல்லத்தைக் 2019ஆம் ஆண்டு செப்டம்பரில் ரூ.12 லட்சம் செலவில் சீரமைத்திருந்தனர். தற்போது ரூ.5 லட்சம் செலவிட்டு சீரமைத்துள்ளதுடன் வீட்டு உபயோகப் பொருள்களாகக் கட்டில், மெத்தை, சோபா, சேர் என ரூ.9.65 லட்சத்துக்கு வாங்கப்பட்டு, அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.
பொறுப்பு ஆளுநரின் ஆலோசகர்களுக்கு இரண்டு மாதத்தில் ஊதியம், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்கிய செலவு உள்பட அனைத்துக்கும் ரூ.24.05 லட்சம் செலவிடப்பட்டுள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்துள்ளது" என்று கூறினார்.
எனவே, மத்திய அரசு புதுச்சேரியில் அதிகப்படியாக உள்ள ஐஏஎஸ் அலுவலர்களைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் கோரிக்கைவைத்துள்ளார்.