டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணி பெரும் வன்முறை சம்பவமாக வெடித்தது. செங்கோட்டைக்கு சென்ற போராட்டக்காரர்கள், கம்பத்தில் ஏறி கால்சா எனும் சீக்கியர்களின் கொடியை ஏற்றினர். இதனால் அங்கு தொடர் பதற்றம் நிலவிய நிலையில், துணை ராணுவ படை குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை அகற்றினர். போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திய முக்கிய விவசாய சங்கங்கள், வன்முறைக்கு காரணம் சமூக விரோதிகள் எனக் கூறி டிராக்டர் பேரணியை நிறுத்தினர்.
இந்த வன்முறையின் போது காவல்துறையினர் 86 பேர் காயமடைந்துள்ளதாகவும், பல்வேறு இடங்களில் பொது, தனியார் சொத்துகள் சேதமடைந்துள்ளதாகவும் டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேரணியின் போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது மூன்று இடங்களில் ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வன்முறையின் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில், ஒரு விவசாயி உயிரிழந்தார்.