சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் காதல் திருமணம் செய்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணை அவரது காதலனே கொலை செய்து பண்ணையில் புதைத்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து லூதியானா போலீசார் தரப்பில், சுதார் பகுதியை சேர்ந்த ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 12 நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறினார். அப்போது பணம் மற்றும் தங்க நகைகளை வீட்டில் இருந்து எடுத்து சென்றார். இதனால், தனது பெண்ணை காணவில்லை என்றும் அவர் பரம்ப்ரீத் சிங் என்பவரை காதலித்து வந்ததால் அவருடன் சென்றிருக்கலாம் என்றும் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் பரம்ப்ரீத் சிங்கை பிடித்து விசாரித்தோம்.
இந்த விசாரணையில் ராணி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதாவது, 12 முன்பு ராணி பணம் மற்றும் நகைகளுடன் பரம்ப்ரீத் சிங் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த பணத்தையும், நகைகளையும் பெற்ற பரம்ப்ரீத் சிங் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த பரம்ப்ரீத் சிங் துப்பட்டாவால் ராணியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இந்த கொலையின்போது பரம்ப்ரீத் சிங்கின் சகோதரர் பவ்ப்ரீத் சிங், அவரது நண்பர்கள் ஏகம்ஜோத், ஹர்பிரீத் உடனிருந்துள்ளனர்.
இதையடுத்து உடலை அப்புறப்படுத்த திட்டமிட்ட 4 பேரும் முதலில் சுதார் கால்வாயில் உடலை வீசியுள்ளனர். இந்த கால்வாயில் தண்ணீர் குறைவாக இருந்ததால் உடல் முழுவதும் மூழ்கவில்லை. இதனால் மீண்டும் உடலை மீட்டு பரம்ப்ரீத் சிங்குக்கு சொந்தமான பண்ணையில் புதைத்துள்ளனர். இதற்காக ஜேசிபி எந்திரத்தை வரவழைத்து குதிரை இறந்துவிட்டதாக நாடகமாடியுள்ளனர். இதுகுறித்து 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின்போது ராணி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டாரா என்பது குறித்து உடற்கூராய்வு முடிவில் தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: குடிநீர் குழாயில் கழிவுநீர் கலப்பு... 2 பேர் உயிரிழப்பு... 122 பேர் மருத்துவமனையில் அனுமதி...