குர்தாஸ்பூர்: ஷாருக்கான் நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான "ஸ்வதேஸ்" திரைப்படத்தை நினைவுபடுத்தும் வகையிலான சம்பவம் ஒன்று பஞ்சாபில் நடந்துள்ளது. அத்திரைப்படத்தில் வருவதைப் போல, வெளிநாட்டில் குடியேறிய இந்தியர் ஒருவர் தனது பூர்வீக கிராமத்தை தத்தெடுத்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள புலேவால் கிராமத்தைச் சேர்ந்த குர்ஜித்சிங் என்பவர், 15 ஆண்டுகளுக்கு முன்பு நார்வே நாட்டில் குடியேறியுள்ளார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த கிராமத்துக்குத் திரும்பிய குர்ஜித்சிங், கிராமத்தின் அவல நிலையைக் கண்டு வேதனையடைந்துள்ளார். இதையடுத்து கிராமத்தின் நிலையை மேம்படுத்த முடிவு செய்தார்.
அதன்படி, தனது சொந்த செலவில் கிராமத்துக்கு தெரு விளக்குகளை அமைத்தார். ஊர் முழுவதும், தகன மைதானத்திலும் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டார். கிராமத்தை மேம்படுத்தும் பணிகளில் தனது குடும்பத்தினரையும் குர்ஜித் ஈடுபடுத்தியுள்ளார். அவர் வெளிநாட்டில் இருக்கும் நேரங்களில் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கிராமத்தின் வளர்ச்சிப் பணிகளை கவனித்துக் கொள்கிறார்கள்.
இதுகுறித்து குர்ஜித்தின் உறவினரான குர்சஜன் கூறுகையில், "குர்ஜித் சில ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தின் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கினார். குர்ஜித் முதலில் கிராமத்தின் தூய்மையில் கவனம் செலுத்தினார். அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளும் கிராமத்தின் தூய்மையைப் பாதிக்காமல் பார்த்துக் கொண்டார்" என்று தெரிவித்தார்.
தனது கிராமத்தின் மீதான குர்ஜித்தின் அன்புக்கு கிராமவாசிகள் வரவேற்பு தெரிவித்தனர். குர்ஜித் நார்வேயில் இருந்தாலும் சரி, பஞ்சாபில் இருந்தாலும் சரி, தனது கிராமத்தைப் பற்றி எப்போதும் நினைக்கிறார் என கிராம மக்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள். பஞ்சாபைச் சேர்ந்த பிற என்ஆர்ஐ-களும் குர்ஜித் சிங்கைப் பின்பற்றி அவரவர் ஊர்களை மேம்படுத்தினால், முழு பஞ்சாப் மாநிலமும் செழிக்கும் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:மாணவ பருவத்தில் சமூக - உணர்வியல் கல்வியின் முக்கியத்துவம் என்ன?