பஞ்சாப்: துபாயிலிருந்து இண்டிகோ பயணிகள் விமானம் ஒன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசஸிற்கு இன்று(மே.15) அதிகாலையில் சென்று கொண்டிருந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அதில் பயணித்த ராஜிந்தர் சிங் என்ற பயணி, அதிகளவு மது குடித்ததாக தெரிகிறது.
போதை அதிகமான நிலையில், அந்த நபர் விமானப் பணிப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். விமான ஊழியர்கள் அவரை கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை. அப்போது, அந்த நபர் விமான பணிப்பெண்ணை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. அதேபோல் கூச்சலிட்டு சக பயணிகளையும் தொந்தரவு செய்துள்ளார்.
பின்னர் விமானம் அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீகுரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் தரையிரங்கியது. ராஜிந்தர் சிங் விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டது தொடர்பாக இண்டிகோ ஏர்லைன்ஸின் உதவிப் பாதுகாப்பு மேலாளர் அஜய் குமார் ராஜசான்சி போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து, போலீசார் ராஜிந்தர் சிங்கை கைது செய்தனர். கைதான பயணி ஜலந்தரில் உள்ள கோட்லி பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதேபோல் கடந்த ஜனவரி மாதம், ஹைதராபாத்திலிருந்து டெல்லி சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணி ஒருவர் அதிகளவு மது குடித்துவிட்டு, விமான ஊழியர்களிடம் தகராறு செய்தார். இதையடுத்து டெல்லியில் விமானம் தரையிறங்கியதும் அவர் கைது செய்யப்பட்டார்.