மத்திய அரசால் அண்மையில் கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு அதரவாக பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லி சென்ற வன்னம் உள்ளனர். இந்நிலையில் பாஞ்சாப் மாநிலம் ஜோகிபூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கமல்ஜீத் சிங் என்பவர், பஞ்சாபிலிருந்து டெல்லிக்கு 225 கி.மீ தனது சைக்கிளில் பயணம் செய்துள்ளார்.
இதுகுறித்து ஈடிவி பாரதிடம் கமல்ஜீத் சிங் கூறுகையில், "விவசாயிகள் போராட்டத்தால், டெல்லி எல்லைப் பகுதியில் போக்குவரத்து முடங்கியுள்ளது. காவல்துறையினர் முற்றுகைகளையும் போக்குவரத்து நெரிசல்களையும் சமாளிப்பதிற்கு இதுவே சிறந்த வழி என தோற்றியது. வாகனங்கள் மூலம் போராட்ட இடத்தை சென்றடைவது கடினம் என உணர்ந்து சைக்கிள் பயணத்தை தேர்வு செய்தேன். எனது சைக்கிளின் பின்புறத்தில் சிறிய பெட்டி ஒன்றை உருவாக்கி அதில் தண்ணீர் மற்றும் உணவுகளை வைத்துகொண்டேன். 16 மணி நேரத்தில் பஞ்சாபிலிருந்து 225 கி.மீ கடந்து டெல்லியை சென்றடைந்தேன்" என்றார்.
புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தலைநகர் டெல்லியில் கடந்த 12 நாள்களுக்கு மேலாக பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்திவருகின்றனர். வட மாநிலங்களில் நிலவிவரும் கடுமையான பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல், விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகிறார்கள். போராட்டம் நடத்திவரும் விவசாய சங்கங்களுடன், மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.