சண்டிகர்: நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பஜ்ரங் தள் அமைப்பிற்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக, இந்து சுரக்சா பரிஷத் அமைப்பின் நிறுவனர் ஹிதேஷ் பரத்வாஜ் என்பவர் பஞ்சாப் மாநிலத்தின் சங்ரூர் மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அதில், "நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் போது பஜ்ரங் தளம் அமைப்பிற்கு எதிராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அவதூறான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதேபோல் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில், பஜ்ரங் தளம் அமைப்பைத் தேச விரோத அமைப்புகளுடன் ஒப்பிட்டுள்ளது.
தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் பஜ்ரங் தளம் அமைப்பை தடை செய்வோம் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. பஜ்ரங் தளம் அமைப்பு குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததால் கார்கே 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று(மே.15) பஞ்சாப் சங்ரூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் தேர்தல் பிரசாரத்தின்போது கார்கே, பிரதமர் மோடியை விஷப் பாம்பு என்று கடுமையாக விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விமர்சனத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தான் பிரதமர் மோடி என்ற தனிநபரைக் குறிப்பிட்டு விமர்சிக்கவில்லை என்றும், பாஜகவின் சித்தாந்தத்தையே விமர்சித்ததாகவும் கார்கே விளக்கமளித்திருந்தார்.