பெங்களூரு: பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் கடந்த அக்.29ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கன்னட திரையுலகில் 49 படங்கள் நடித்த புனித் ராஜ்குமார், கண்தானம் உள்ளிட்ட பல்வேறு பொதுநலப்பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுவந்தார்.
இந்நிலையில், புனித் ராஜ்குமாரின் கண்களுக்கு ஏற்ற நான்கு பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பார்வை குறைபாடு சரிசெய்யப்பட்டுள்ளது.
இறந்தும் ஒளியேற்றினார் புனித்
இதுகுறித்து, தனியார் மருத்துவமனையின் கண் மருத்துவர் புஜங்கஷெட்டி நேற்று (நவ. 1) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்," ராஜ்குமார் குடும்பத்தார் சொல்லியதை செய்துகாட்டியுள்ளனர்.
தந்தை ராஜ்குமாருக்கு அளித்த சத்தியத்தின்படி, புனித் ராஜ்குமார் தனது கண்களை தானம் செய்துள்ளார். புனித்தின் உயிரிழப்பு அதிர்ச்சிகரமானது. ஆனால், அவர் இறந்த பின்னும் நால்வரின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார்.
அவரின் இரண்டு கண்கள் மூலம் நான்கு பயளானிகளின் வெவ்வேறு பார்வைக் குறைப்பாடுகள் தீர்க்கப்பட்டு, அவர்களுக்கு பார்வை திரும்பியுள்ளது. எங்களுக்குத் தெரிந்தவரை, கர்நாடகாவில் இதுபோன்று இதை யாரும் செய்ததில்லை" என்றார்.
இதையும் படிங்க: 10 ஆண்டுகளுக்கு முன்பே கண் தானம் செய்த புனித் ராஜ்குமார்