புனே: முப்பரிமாண அச்சிடுதல் மற்றும் மருந்துத்துறையின் ஒருங்கிணைப்பில், நுண்கிருமித் தொற்றுக்களை அழிக்கும் புது விதமான முகக் கவசங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
புனேவில் உள்ள 'தின்கர் டெக்னாலஜிஸ் இந்தியா' என்ற புதுமை நிறுவனம், 'வைரசைட்ஸ்' (virucides) என்று அழைக்கப்படும் நுண்கிருமிகளுக்கு எதிரான காரணிகள் பூசப்பட்ட முகக்கவசங்களைத் தயாரித்துள்ளது.
கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ், தன்னாட்சி அமைப்பாக இயங்கும் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தால் வணிக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதன்மைத் திட்டங்களுள் இந்த முகக்கவசத் திட்டமும் ஒன்று.
கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் இந்தத் திட்டத்திற்கான நிதி உதவியைத் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் வழங்கியது.
இதைத்தொடர்ந்து, 2020, ஜூலை 8ஆம் தேதி, இந்த முகக்கவசத்தை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
சாதாரண என்-95, மூன்று அடுக்குகள் மற்றும் துணி முகக்கவசங்களுடன் ஒப்பிடுகையில், குறைந்த செலவிலான இந்த முகக் கவசங்கள், கோவிட்- 19 தொற்றின் பரவலைத் தடுப்பதில் ஆற்றல் வாய்ந்ததாக உள்ளது என, 2016 ஒன்றிணைக்கப்பட்ட நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இந்த முகக் கவசத்திற்கான காப்புரிமைக்கு 'தின்கர் டெக்னாலஜிஸ்' இந்தியா நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
இந்த முகக்கவசத்தின் வணிக ரீதியான உற்பத்தியும் தொடங்கி விட்டதாக, அதன் நிறுவன இயக்குநர் டாக்டர் ஷித்தல்குமார் சம்பாத் கூறினார்.
இதனிடையே 6 ஆயிரம் முகக்கவசங்களை அரசு சாரா அமைப்பு ஒன்று நன்துர்பர், நாசிக் மற்றும் பெங்களூருவில் உள்ள 4 அரசு மருத்துவமனைகளில் மருத்துவ பணியாளர்களின் பயன்பாட்டிற்கும், பெங்களூருவில் உள்ள பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கும் விநியோகித்துள்ளது.